சென்னை:ரூ.2400 கோடி மோசடி செய்த ஆருத்ரா கோல்டு நிறுவன வழக்கில் அந்நிறுவனத்தின் இயக்குநரில் ஒருவரான பாஜக நிர்வாகி ஹரிஷ் மற்றும் அந்நிறுவனத்தின் நிர்வாகி மாலதி ஆகிய இரண்டு பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
அதிக வட்டி தருவதாகக் கூறி ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து ஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் நிறுவனம் 2438 கோடி வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது. இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்து, நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
குறிப்பாக, இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனத்தின் இயக்குநர்கள் பாஸ்கர், மோகன் பாபு செந்தில்குமார், நாகராஜ், மேலாளர்கள் பேச்சிமுத்து ராஜா, ஐயப்பன், ஏஜென்ட் ரூசோ சந்திரசேகர் ஆகிய எட்டு பேர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இந்நிறுவனத்தின் மேனேஜிங் இயக்குநர் ராஜசேகர், மைக்கேல், உஷா ராஜ் ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று தலைமறைவாகி உள்ளதால் அவர்களைப் பிடிக்க, ரெட் கார்னர் நோட்டீஸ் (Red Corner Notice) மற்றும் லுக் அவுட் நோட்டீஸ் (Lookout Notice - LOC) பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்த வழக்கில், ரொக்கமாக ரூ.5.69 கோடியும், 1.13 கோடி தங்க மற்றும் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் ஏஜெண்டுகளின் வங்கி கணக்கு இருப்பில் இருந்த 96 கோடி ரூபாய் பணம் முடக்கப்பட்டு உள்ளது. இவை தவிர, 97 சொத்துகள் கண்டறியப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்து வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குநரில் ஒருவரான ஹரிஷ் மற்றும் நிர்வாகி மாலதி ஆகிய இருவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஹரிஷ் இவ்வழக்கில் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் பாஜகவில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை காஞ்சிபுரம் மாவட்ட மாநில செயலாளராக பொறுப்பு வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில், ஹரிஷ் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய நிலையில் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஹரிஷ் மோசடி செய்த பணத்தை பதுக்கி வைத்திருப்பது குறித்தும், சொத்துகள் வாங்கப்பட்டிருப்பது குறித்தும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக இருந்து வரும் பிற இயக்குநர்கள் குறித்தான விவரங்களையும் ஹரிஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆருத்ரா, ஹிஜாவு மோசடி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி-க்கு உத்தரவு