சென்னைஅடுத்த குரோம்பேட்டையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. தினந்தோறும் சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த மருத்துவமனையைப் பயன்படுத்தி வருகின்றனர். 100க்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாக தங்கி சிகிச்சைப்பெறும் வசதியும் உள்ளது.
இம்மருத்துவமனையில் மாதந்தோறும் 250 முதல் 300 பிரசவம் நடக்கிறது. மேலும் 24 மணி நேர விபத்து சிகிச்சைப்பிரிவும் உள்ளது. மேலும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த சென்ற ஆண்டு நிதிகள் ஒதுக்கப்பட்டன. இந்தநிலையில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சுகாதாரமின்றி இருப்பதாகவும், நோய்ப்பரவும் இடமாக உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக்கழிவுகள், சிகிச்சைப்பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் பேட்ஜ், நோயாளிகளுக்குப்பயன்படுத்தப்படும் மருந்து பாட்டில்கள், ஊசிகள் உள்ளிட்ட மருத்துவக்கழிவுகள் அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டுக்கு அருகே கொட்டப்பட்டுள்ளன.