அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாண்டமுத்து. இவர் சென்னை அயனாவரம் சோலைத் தெருவில் வீடு எடுத்து தங்கி ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இந்நிலையில் இன்று தனது ஆட்டோவிற்கு எஃப்.சி செய்வதற்காக அண்ணா நகர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஆட்டோவை ஆய்வு செய்த ஆர்.ஐ ஆட்டோவின் இன்ஸுரன்ஸ் கடந்த 27ஆம் தேதியுடன் காலாவதியாகிவிட்டதால், அதை புதுப்பித்து கொண்டு வருமாறு கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து கரோனா ஊரடங்கின் காரணமாக போதிய வருமானம் இல்லாததால் இன்ஸூரன்ஸ் கட்ட இயலாது எனக்கூறிய தாண்டமுத்து ஆட்டோவை எஃப்.சி (FC) செய்து தருமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு ஆர்.ஐ மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த தாண்டமுத்து ஆட்டோவை நடு ரோட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக வில்லிவாக்கம் தீயணைப்புத் துறையினருக்கும், அண்ணா நகர் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த வில்லிவாக்கம் தீயணைப்புத் துறையினர் ஆட்டோவில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இதையடுத்து,அண்ணா நகர் காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநர் தாண்டமுத்து மீது பொதுமக்களை அச்சுறுத்தல் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.