சென்னை, குன்றத்தூர் அடுத்த கோவூர், தண்டலம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது வீட்டின் பூட்டை உடைத்து 7 1/2 சவரன் நகை, 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து குன்றத்தூர் காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இருப்பினும் குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்துவந்த நிலையில், கொள்ளையன் கைது செய்யப்படுவதில் தொய்வு ஏற்பட்டது. அது மட்டுமின்றி அனைத்தும் ஒரே வகையிலான கொள்ளைச் சம்பவங்கள் என்பதால் கொள்ளையனை பிடிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
எனவே கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சுமார் 150க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்த காவல்துறையினர், இதனடிப்படையில், பம்மல், கவுல்பஜாரை சேர்ந்த பாலாஜி ( 25) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கார் டிரைவரான இவர், காருக்கு மாதத்தவணை முறையாக செலுத்த முடியாத காரணத்தால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட ஆரம்பித்ததும், பின்னாளில் தனக்கு பணத்தேவை இருக்கும் போதெல்லாம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுவந்ததும் தெரியவந்தது.
கொள்ளையடித்த பணத்தில் காருக்கு மாதத்தவணை கட்டி முடித்து விட்டு, பாலாஜி தற்போது புதிய கார் ஒன்றிற்கு உரிமையாளராகியுள்ளார். மனைவிக்கு பல்வேறு நகைகளும் எடுத்துக் கொடுத்துள்ளார். இவரிடம் இருந்து 65 சவரன் நகைகளும், 3 கிலோ வெள்ளி பொருட்கள் ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருடனாக மாறிய ஓட்டுநர் பாலாஜி