சென்னை: தமிழ்நாடு திறந்தநிலைப்பல்கலைக்கழகத்தின் 13ஆவது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது.
இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசும்போது, 'திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவோர் சாதாரணமானவர்கள் அல்ல. வேலைபார்த்துக்கொண்டே மேல் படிப்பு படிப்பவர்கள் தான் திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவர்கள்.
இன்னும் 3 நாளில் பணி ஓய்வு பெற உள்ள திறந்தநிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்' எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், ’பட்டம் பெறுவதுடன் கல்வி நிறைவடையாது. வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருப்பது தான் கல்வி. ஆளுநருடன் பல பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்கும் போதெல்லாம் பெண்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. பெண் கல்வி வளர வேண்டும் என்று நினைப்பதே திராவிட மாடல்.
ஆளுநரும் பெண்கள் அதிகளவில் கற்க வேண்டும் என்று தான் நினைப்பதாக கூறினார். வேலைவாய்ப்பே முதன்மையாக இருப்பதாகவும், படிக்கும் மாணவர்களின் வருங்கால தேவைகளை நிறைவேற்றவே 'நான் முதல்வன் திட்டம்' கொண்டுவரப்பட்டுள்ளது. தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலில் SIET மகளிர் கல்லூரி இடம் பிடித்ததற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சருடன் பங்கேற்றதன் காரணமாகவே திறந்தநிலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை சற்று தள்ளி வைக்குமாறு ஆளுநரிடம் கேட்டுக்கொண்டேன். அதற்கு ஒத்துழைத்த ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
கல்லூரிப் படிப்பில் இடையில் நிற்கும் மாணவர்களை திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் சேர்க்க வேண்டும் எனவும், மாணவர்களை தொடர்ந்து படிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறியுள்ளார். அதற்கான நடவடிக்கையும் எடுக்க வேண்டும். நானும், எனது மனைவியும் தொலைதூரக்கல்விமூலம் பயின்றவர்கள் தான்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி படிப்புகளை அங்கீகரிக்க பல்கலைக் கழக மானியக்குழு மறுத்துவிட்ட நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி படிப்புகளைத் தொடர்ந்து நடத்த ஆவண செய்யுமாறு பல்கலைக் கழக மானியக்குழுவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்த வேண்டும்.
பொறியியல் படிப்புகளையும் தொலைதூரக்கல்வி மூலம் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றும் ஆளுநரிடம், அமைச்சர் பொன்முடி வலியுறுத்தினார்.
பெண் கல்வி வளர வேண்டும் என்று நினைப்பதே திராவிட மாடல் ஆட்சி இதையும் படிங்க: படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை - ஓபிஎஸ் கண்டனம்!