சென்னை: மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசு ஏற்றுள்ளதற்கு மருத்துவர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சமூக சமத்துவதிற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது, "தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியது. அந்த ஒதுக்கீட்டின் மூலம் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் ஏழை மாணவர்களுக்கான கல்விச் செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்கவேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு மூலம் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கல்விச்செலவை தமிழ்நாடு அரசே ஏற்பதாக அரசாணை வெளியிட்டுள்ளதை வரவேற்கிறோம். தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.