சென்னை: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "எம்பிபிஎஸ் படிப்பிற்கு நெக்ஸ்ட் தேர்வை திணிப்பதுபோல் பல் மருத்துவப் படிப்பிற்கும் மத்திய அரசு நெக்ஸ்ட் தேர்வை திணிப்பது கடும் கண்டனத்திற்குரியது. மருத்துவப் படிப்புகளில் மாநில உரிமைகளைப் பறிப்பது சரியல்ல. எனவே, நெக்ஸ்ட் தேர்வை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும். பிரதமர் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக, தலைமை கணக்காயர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
தமிழ்நாடு அரசு முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரும் அரசு சாரா தனியார் மருத்துவர்கள், படிப்பை முடித்ததும் இரண்டு ஆண்டுகள் காலம் கட்டாயமாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. இரண்டாண்டு கால தற்காலிகப் பணிக்குப் பிறகு, அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது. இதனால் அவர்களும் பொதுமக்களும் பயனடைந்தார்கள். மேலும், வேறு மாநில மருத்துவர்கள் அகில இந்திய ஒதுக்கீடு மூலம் அதிக இடங்களை எடுப்பதையும் தடுக்க முடிந்தது.
ஆனால் தற்பொழுது, மருத்துவர்கள் மத்தியில் வேலையின்மை அதிகரித்துள்ளது. காலிப்பணியிடங்களும் அதிகம் இல்லை. புதியப் பணியிடங்களும் உருவாக்கப்படவில்லை. முதுநிலை மருத்துவ இடங்களும் அதிகரித்துள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்பின் போதே, மூன்று மாத காலம் மாவட்ட மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற திட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தற்பொழுது, முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்து இரண்டாண்டு கட்டாயப் பணியை முடித்தவர்களுக்கு, பணி நிரந்தரமும் வழங்கப்படுவதில்லை. காலி இடங்கள் இல்லாததால் எல்லோருக்கும் இரண்டாண்டு கட்டாயப் பணியும் வழங்கப்படவில்லை.
இதனால், முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ்களைப் பெற முடியாத நிலையில் உள்ளனர். சான்றிதழ்கள் கிடைக்காததன் காரணமாக தனியார் துறைகளிலும் வேலை பெற முடியாத நிலையில் உள்ளனர். இப்பிரச்னை புதிய நெருக்கடிகளை சிக்கல்களை உருவாக்கியுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்தவர்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதாக உள்ளது. எனவே, இந்த இரண்டாண்டு கட்டாய வேலை என்பதை ஓராண்டாக குறைக்க வேண்டும்.
வேறு மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் பட்டமேற்படிப்பு இடங்களில் சேர்வதை தடுக்கும் வகையில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் தமிழ்நாடு மாணவர்கள் ஒதுக்கீடு பெற வழிவகை செய்ய வேண்டும்.