சென்னை:சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத் கூறுகையில், "அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் உள்ள இரண்டாயிரத்து 448 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர், சுகாதார ஆய்வாளர்களுக்கான பணியிடங்களுக்கும், நான்காயிரத்து 848 செவிலியர் பணியிடங்களுக்கும் என மொத்தமாக ஏழாயிரத்து 296 பணியிடங்களுக்கான பணிநியமனங்களைச் செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
பணிநியமனங்கள் மாவட்ட அளவில் நடத்தப்படும் எனவும் மாநில நலவாழ்வுச் சங்கம் மற்றும் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த அறிவிப்பில், இந்தப் பணியிடங்கள் ஒப்பந்த, தற்காலிக அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இப்பணியில் சேர விரும்புவோர் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்.
உழைப்புச் சுரண்டல்
இந்தப் பணியிடங்களுக்கான நியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது பற்றிய அறிவிப்பு தெளிவாக இல்லை; இது கவலை அளிக்கிறது. ஒப்பந்தம், தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யும்பொழுது இட ஒதுக்கீட்டை கடைப்பிடித்திட வேண்டும்.
நிரந்தர அடிப்படையில் இல்லாத தற்காலிக அடிப்படையிலான, ஒப்பந்த அடிப்படையிலான அல்லது குறிப்பிட்ட கால நிர்ணய அடிப்படையிலான (limited time basis), வெளிக் கொணர்தல் அடிப்படையிலான, மத்திய, மாநில அரசுகளின் பணிகளுக்கு இட ஒதுக்கீட்டை கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய சமூக நீதித் துறை அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதல் உள்ள போதிலும், தேசிய சுகாதார இயக்கம் மூலம், தமிழ்நாடு அரசு பணிநியமனம் செய்யும்பொழுது, இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாதது வருத்தம் அளிக்கிறது. இது இட ஒதுக்கீடு உரிமைபெற்ற பிரிவினரின் நலன்களுக்கு எதிரானது. சமூக நீதிக்கு எதிரானது.