தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் - மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பேராசிரியர்கள் பணியிடங்களை விரைவில் நிரப்பாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் - தமிழக அரசிற்கு எச்சரிக்கை விட்ட டாக்டர்கள் சங்கம்
மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் - தமிழக அரசிற்கு எச்சரிக்கை விட்ட டாக்டர்கள் சங்கம்

By

Published : May 30, 2023, 6:38 AM IST

மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் - தமிழக அரசிற்கு எச்சரிக்கை விட்ட டாக்டர்கள் சங்கம்

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் எந்த விதமான சிக்கலும் இல்லை என்றும், நிரப்பாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மருத்துவக்கல்லூரிகளில் சிசிடிவி சரியில்லை என்பதை அரசு சரி செய்திருக்க வேண்டும் என்றும், இதற்காக தமிழ்நாடு அரசை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு, தமிழ்நாட்டு மாணவர்களை பழிவாங்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், மாநிலச் செயலாளர் சாந்தி ஆகியோர் ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், “சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ .விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி , தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்து, தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்.எம்.சி) இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் 500 எம்.பி.பி.எஸ் இடங்களில் மாணவர் சேர்க்கையை நடத்த முடியாமல் போய்விடுமோ என்ற குழப்பம் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான கட்டணம் வெறும் 13,610 ரூபாய் மட்டுமே. 500 இடங்கள் பறிபோனால், 500 பேர் இந்த குறைந்த கட்டணத்தில் படிக்கும் வாய்ப்பு பறிபோகும். ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை பதிவேடு சரியாக இல்லை, சி.சி.டி.வி கேமரா பதிவுகளும் சரியாக இல்லை போன்ற காரணங்களைக் கூறி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த காரணங்கள் அனைத்தும் சிறிய குறைபாடுகள். இக்குறைபாடுகளை சரி செய்ய கால அவகாசத்தை வழங்கி, அங்கீகாரத்தை தொடர்ந்திருக்க வேண்டும். அங்கீகாரம் ரத்து என்பது சரியான முடிவல்ல. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் போதுமான வசதிகள் இல்லாவிட்டாலும் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கின்றனர். அரசு மருத்துவக் கல்லூரியில் 500 இடங்களை மூடுவதால் தனியார் மருத்துவக் கல்லூரிகளை மாணவர்கள் நாடி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்” என தெரிவித்துள்ளனர்.

மருத்துவப் பேராசிரியர்களின் பற்றாக்குறை:

தொடர்ந்து பேசிய அவர்கள், “மருத்துவப் பேராசிரியர்கள் பற்றாக்குறை என்பது தமிழ்நாட்டிலும் இல்லை. மருத்துவக் கல்லூரிகளில் காலிப்பணியிடங்களையும் நிரப்புவதில்லை. புதிய பணியிடங்களையும் உருவாக்குவதில்லை. இதை மறைக்க தனியார் மருத்துவக் கல்லூரிகளும், அரசு மருத்துவக் கல்லூரிகளும் முறைகேடுகளில் ஈடுபட்டன. அதாவது ஒரே மருத்துவப் பேராசிரியர் மூன்று நான்கு மருத்துவக் கல்லூரிகளில் பணி செய்வதாக காட்டப்படும் மோசடிகள் நடந்தன.

பேராசிரியர்கள் பல கல்லூரிகளிலும் ஊதியங்களை பெற்றனர். மாநில அரசுகளும், இந்திய மருத்துவக் கழகத்தினர்( MCI) ஆய்வுக்கு வருகின்றபோது, வேறு மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்களை ஆய்வு நடத்தப்படும் கல்லூரிக்கு தற்காலிகமாக இடமாறுதல் அளித்து ஏமாற்றின. ஆய்வுக் குழு, மற்றும் எம்.சி.ஐ யில் நிலவிய ஊழல் போக்கும் இத்தகைய ஏமாற்று வேலைகளுக்கு உதவின. இத்தகைய ஏமாற்று வேலைகள் மருத்துவக் கல்வியின் தரத்தை பாதித்தது.

இந்நிலையில், நவீன தொழில் நுட்பம், ஆதார், வங்கிக் கணக்குகள் ஆதாருடன் இணைத்தது போன்றவை இப்பிரச்னைக்கு முடிவு கட்ட உதவியுள்ளது. இவற்றின் உதவியோடு, பேராசிரியர்கள் இருப்பது போல் ஏமாற்றும் பிரச்னைக்கு தீர்வு காண, எம்.சி.ஐக்குப் பதிலாக உருவாக்கப்பட்டுள்ள என்.எம்.சி முயல்கிறது. ஸ்டான்லி போன்ற மிகப்பெரிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை பல்வேறு நடைமுறை சிக்கல்களை உருவாக்குகின்றன.

ஒரு மருத்துவக் கல்லூரிக்கு கீழே பல இடங்களில் மருத்துவமனைகள் அல்லது துறைகள் இயங்குவது, 24 மணிநேரப் பணி, நீதி மன்றப்பணி, முக்கியப் பிரமுகர்களுக்கான பணி போன்றவை இதில் அடங்கும். இவற்றை என்.எம்.சி கவனத்தில் கொள்ளாமல் எந்திரத்தனமாக செயல்பட்டது சரியல்ல. போதிய பேராசிரியர்கள் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல, நோயாளிகளே இல்லாமலும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் நடைபெறுகின்றன.

இத்தகைய மருத்துவக் கல்லூரிகள் மீது எந்த நடவடிக்கைகளையும் என்.எம்.சி எடுப்பதில்லை. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மூன்று மருத்துவக் கல்லூரிகளில், பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு குறைபாடுகள், சி.சி.டி.வி குறைபாடுகளை காரணம் காட்டி அங்கீகாரத்தை ரத்து செய்தது என்.எம்.சி மீது பல ஐயங்களை ஏற்படுத்துகிறது” என்றனர்.

அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதால் ஏற்படும் விளைவுகள்:

மேலும், இது குறித்து பேசிய அவர்கள், “இது மருத்துவக் கல்வியை தனியார் மயமாவதற்கு சாதகமாக உள்ளது. தனியார் மருத்துவ நிறுவனங்களில் மருத்துவ இடங்களில் 50 விழுக்காடு இடங்களுக்குத்தான் கட்டணங்கள் முறைப்படுத்தப்படும் எனக் கூறியதோடு, மீதி 50 விழுக்காடு இடங்களுக்கு அந்நிறுவனங்களே கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளலாம் என அனுமதித்தது தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை பாதித்துள்ளது. தனிப்பட்ட மருத்துவ நிறுவனங்கள் தாங்களே சில படிப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம் என என்.எம்.சி சட்டம் கூறுகிறது.

நாடு முழுவதும் எவ்வளவு எம்.பி.பி.எஸ் மருத்துவர்கள் பதிவு பெற்றிருக்கிறார்களோ, அந்த எண்ணிக்கையில் 3இல் ஒரு பகுதி அளவிற்கு, நவீன அறிவியல் மருத்துவத்தோடு தொடர்புடையவர்கள் சமூக சுகாதாரம் வழங்குபவர்கள் ( Community Health Provider) என்ற பெயரில், நடுவாந்திர (Mid level) மருத்துவத் தொழில் செய்ய வரம்புக்குட்பட்ட உரிமம் வழங்கப்படும் என என்.எம்.சி சட்டம் கூறுகிறது. அது மட்டுமன்றி என்.எம்.சி குழு ஆய்வு இல்லாமலே மருத்துவக் கல்லூரிகளை தொடங்கிடவும் வழி வகுத்துள்ளது. இவை எல்லாம் மருத்துவ சேவைத் தரத்தை பாதிக்காதா? ஒருங்கிணைந்த அடிப்படை மருத்துவக் கல்வி, கலப்பு மருத்துவம் ( Mixopathy) போன்றவையும் நவீன அறிவியல் மருத்துவத்தை நீர்த்துப் போகச் செய்யும்.

இது மருத்துவ சேவைத் தரத்தை பாதிக்கும். ஒரு பக்கம் மருத்துவத் தரத்திற்கு கேடு பயக்கும் செயல்களை செய்து கொண்டே, மறுபக்கம் சிறு சிறு காரணங்களுக்காக அரசு மருத்துவக் கல்லூரிகளின், இளநிலை மருத்துவ இடங்களுக்கு, என்.எம்.சி அனுமதி மறுப்பது வேடிக்கையாக உள்ளது. மாணவர்கள் பேராசிரியர் விகிதங்கள் உயரத்தப்பட்டது.

பேராசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 70 ஆக உயர்த்தப்பட்டது. மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கான விதிமுறைகளில் பல தளர்வுகளையும் மேற்கொண்டது. மருத்துவக் கல்வித் தரத்தை பாதிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. இதை பற்றி எல்லாம் என்.எம்.சி கவலைப்படவில்லை.

சுகாதாரம் என்பது மாநில பட்டியலில் உள்ளது. ஆகவே மருத்துவமனைகளை நடத்துவது, மருத்துவர்களை உருவாக்குவது, செவிலியர்களை உருவாக்குவது போன்றவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். மருத்துவக் கல்வியை முறைப்படுத்தும் அதிகாரம் மாநில மருத்துவக் கவுன்சில்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஒரு கூட்டமைப்பாக மட்டுமே என்.எம்.சி போன்ற அமைப்புகள் இருக்க வேண்டும்.

அதுவே மாநில சுயாட்சிக்கும், கூட்டாட்சி கோட்பாட்டிற்கும் உகந்ததாக இருக்கும். தமிழ்நாடு அரசு, பறிபோகும் ஆபத்தில் உள்ள 500 இளநிலை மருத்துவ இடங்களை காத்திட வேண்டும். என்.எம்.சியால் சுட்டிக் காட்டப்பட்டுள்ள குறைபாடுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்புகளையும் மேம்படுத்த வேண்டும். என்.எம்.சி விதிமுறைகளுக்கேற்ப போதிய மருத்துவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ளனர். இருப்பினும் உரிய நேரத்தில் பதவி உயர்வு கலந்தாய்வுகள் நடத்தப்படாததால், 450 பேராசிரியர்கள் மற்றும் 550 இணைப் பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. மருத்துவர்கள் பதவி உயர்வு, மருத்துவக் கல்வியோடு நேரடி தொடர்புடையது. தமிழ்நாடு அரசு மெத்தனமாக இருந்தால் பெரும் பாதிப்புகள் ஏற்படும்.

அத்தகைய அவப்பெயருக்கு தமிழ்நாடு அரசு ஆளாகி விடக் கூடாது. எனவே, மருத்துவர்கள் பதவி உயர்வு பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும். மருத்துவ இடங்களை காக்க வேண்டும். மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கு முறைப்படி பதவி உயர்வு வழங்கினாலே இந்தப் பிரச்னையை சரி செய்ய முடியும். மேலும் தகுதி வாய்ந்தவர்கள் அனைவருக்கும் இணைப் பேராசிரியர் பதவியும், பேராசிரியர் பதவியும் வழங்க வேண்டும்.

அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வினை ஆன்லைன் மூலம் உடனே நடத்திட வேண்டும். அவ்வாறு நடத்தினால் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடியும். காலிப்பணியிடங்களை நிரப்பாமல் விட்டு விட்டால் இதனைக் காரணமாக காட்டி மேலும் சில மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தையும் தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்யலாம்.

சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் நீண்ட காலமாக பணியாற்றி வருகின்றனர். இதனால் இளம் மருத்துவர்களின் வேலைவாய்ப்பும், பதவி உயர்வும் பாதிக்கப்படுகிறது. எனவே, ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் அனைவரையும் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்” என கூறியுள்ளனர்.

இதையும் படிங்க:Arts and Science Admission: கலை அறிவியல் சிறப்புப்பிரிவு கலந்தாய்வு துவக்கம்..

ABOUT THE AUTHOR

...view details