இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சாத்தான்குளத்தில் நிகழ்ந்த தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவத்தில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் எடுத்து வரும் நடவடிக்கைகளை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதோடு, வழக்கும் கொலை வழக்காக மாற்றப்பட்டு விரிவான, விரைவான விசாரணையை தமிழ்நாடு காவல்துறையின் சிபிசிஐடி பிரிவு மேற்கொண்டு வருகிறது.
ஆனால், இவையாவிற்கும் நேர் எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் தொடர்ந்து தமிழ்நாடு காவல் துறையின் நடவடிக்கைகள் மீதும், தமிழ்நாடு அரசின் மீதும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளையும், தரம் தாழ்ந்த விமர்சனங்களையும் தொடர்ந்து கூறி வருகிறார்.
எந்தவொரு குற்றச் சம்பவத்தின் அடுத்த விநாடியிலேயே அதன் முழு விவரங்களும் வெளிவந்துவிடாது. முதற்கட்ட விசாரணை, சாட்சிகளை சேகரித்தல், சூழல் சார்ந்த ஆதாரங்களை திரட்டுவது, உடற்கூறு ஆய்வு பரிசோதனை அறிக்கையை பெறுவது போன்றவற்றின் அடிப்படையில்தான் ஒரு குற்றத்தின் முழு விவரங்களும் திரட்டப்பட்டு, வழக்கின் போக்கும், குற்றவாளிகளும் உறுதி செய்யப்படுகிறார்கள்.
குறிப்பாக காவல் நிலையங்களில் நிகழும் மரணங்களிலும், விசாரணையின் போது நிகழும் உயிரிழப்புகளிலும், முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்துவிட்டு, அதன் பிறகு கிடைக்கும் ஆதாரங்கள் மற்றும் திரட்டப்படும் செய்திகள் ஆகியவற்றைக் கொண்டே அது கொலையா? தற்கொலையா? இயற்கை மரணமா? என்பது உறுதி செய்யப்படும்.
இதுதான் குற்றவியல் சட்ட நடைமுறை. இந்த நடைமுறைதான் சாத்தான்குளத்தில் நடந்த தந்தை, மகன் இருவரது மரணத்திலும் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது. ஆனால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில் கனிவுள்ளம் கொண்ட முதலமைச்சர், மறைந்த இருவரது குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் உடனடியாக நிவாரணம் வழங்க ஆணையிட்டதோடு, கல்வித் தகுதிக்கேற்ப குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் ஆணையிட்டார்கள்.
இச்சம்பவத்தில் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உரிய உச்சப்பட்ச தண்டனையை பெற்றுத் தருவோம் என்பதையும் தெளிவுபடுத்தியதோடு, நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் விரைந்து நடத்தப்படும் வழக்காக இவ்வழக்கு கையாளப்படும் நிலையில், வழக்கு விசாரணைக்கு எவ்வித இடையூறோ, குந்தகமோ ஏற்பட்டுவிடாத அளவில் மதுரை உயர்நீதிமன்றத்தின் கருத்தறிந்து, இவ்வழக்கை மத்திய புலனாய்வு பிரிவான CBI-யிடம் ஒப்படைக்கப்படும் என்பதையும் முதலமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இதில், எங்கே தமிழ்நாடு அரசு தவறிழைத்தது? எங்கே தமிழ்நாடு காவல்துறை காலதாமதம் செய்தது? எங்கே முதலமைச்சர் முரண்பாடாக பேசினார்? எங்கே நீதி மறுக்கப்பட்டது? அறிக்கை அரசியல்வாதி ஸ்டாலின் இதனை தெளிவுப்படுத்த வேண்டும். அரசியல் செய்வதற்கென சில சம்பவங்களை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதற்கான திரைக்கதையை வடநாட்டு ஆளை வைத்து எழுதிக்கொண்டு, அரசின் மீதும், விசாரணை அமைப்புகளின் மீதும், பழிபோடுவதும் அதற்கு பக்கபலமாக தங்கள் குடும்ப ஊடகங்களை வைத்து பொதுமக்களிடையே அரசுக்கு அவப்பெயரை உருவாக்க திமுக திட்டமிட்டு மலிவான அரசியலை செய்து வருகிறது.