சென்னை: அதிமுக புரட்சித் தலைவி அம்மா பேரவை உறுப்பினர்களுக்கான செயல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் இரண்டாம் நாளாக நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமில் மூத்த நிர்வாகிகள் பொன்னையன், அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், சி. விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், கே.பி. அன்பழகன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி உரையில், ’திமுக அரசு வேதனையை மட்டுமே தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்துள்ளனர். லேபிள் ஒட்டி அதிமுகவின் திட்டங்களை திமுக திறந்து வருகிறது. ஓராண்டாக திமுகவின் மோசமான ஆட்சியை மக்கள் பார்த்து வருகிறார்கள். விளம்பரத்தில் மட்டும் தான் இந்த அரசு ஓடிக்கொண்டிருக்கிறது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும்’ என்றார்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், ’அதிமுகவை ஒழிக்க வேண்டும் என்பதே திமுகவின் எண்ணம். அதனால்
அதிமுகவினர் அத்தனை நபர்கள் மீதும் போலி வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். திமுக ஆட்சி அமைத்தபின் மக்கள் துன்பப்பட்டு வருகிறார்கள். இளைஞர்களுக்கு அதிமுகவில் புதிய பொறுப்புகளை வழங்க வேண்டும். மீண்டும் அதிமுக ஆட்சி வர வேண்டும் என்ற எண்ணத்திலேயே தொண்டர்கள் செயல்பட்டு வருகிறார்கள். 2026இல் நிச்சயம் ஆட்சி அமைப்போம். நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு பாடம் புகட்ட மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்’ என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ’திமுக உதயநிதி ஸ்டாலினை வைத்து நாடகம் நடத்தி வருகிறது. பல இடங்களில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. காவல் துறையை சுதந்திரமாக செயல்படவிட வேண்டும்’ எனவும் தெரிவித்தார்.