தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காபி சாப்பிட அழைத்த மோடி: மம்தா முதல் ஸ்டாலின் வரை தொடரும் பயணம்! - பிரசாந்த் கிஷோர்

திமுக தனது கட்சி ஆலோசகராக மோடியுடன் பணியாற்றிய பிரசாந்த் கிஷோரை தேர்ந்தெடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரஷாந்த் கிஷோரின் அரசியல் பயணம் குறித்த தொகுப்பு...

DMK has roped in well-known political strategist Prashant Kishore
DMK has roped in well-known political strategist Prashant Kishore

By

Published : Dec 12, 2019, 11:05 PM IST

Updated : Dec 12, 2019, 11:40 PM IST

திமுகவின் கட்சி ஆலோசகராக செயல்பட்டுவந்த சுனில் வெளியேறியதையடுத்து பிரசாந்த் கிஷோரை அக்கட்சி தேர்வு செய்துள்ளது. சுனிலும், பிரசாந்தும் இணைந்து சிஏஜி (citizens for accountable governance) என்ற அரசியல் ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை தொடங்கினர். தற்போதைய ஐபிஏசி (Indian Political Action Committe) நிறுவனத்துக்கு முன்னோடி சிஏஜிதான். பாஜகவுக்கு நெருங்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவராக செயல்பட்டவர் பிரசாந்த் கிஷோர். 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடியின் வெற்றிக்காக பணியாற்றியதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தார்.

பிரசாந்த் பற்றி சில முக்கிய தகவல்கள்:

Prashant Kishore

ஐபிஏசி நிறுவனத்தை நிறுவியர் பிரசாந்த் கிஷோர்.

பொறியியல் பட்டதாரியான பிரசாந்த், ஐக்கிய நாடுகள் அவையின் பொது நல அதிகாரியாக 10 ஆண்டுகள் பணியாற்றினார்.

சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களின் மூலம் ஒபாமா நேர்த்தியாக பரப்புரை செய்வதைப் பார்த்து உத்வேகம் அடைந்தவர் பிரசாந்த் கிஷோர்.

மோடியுடன் 2012ஆம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தலிலும், 2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் அவர் பணியாற்றினார்.

மோடியின் 3டி பேரணி உள்ளிட்ட முக்கியமான தேர்தல் பரப்புரையில் பிரசாந்தின் பங்களிப்பு முக்கியமானது.

2015ஆம் ஆண்டு மூன்றாம் முறை நிதிஷ் குமார் பீகார் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது பிரசாந்த் அதில் பங்காற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமரிந்தர் சிங்குக்காக 2017ஆம் ஆண்டு பணியாற்றினார். அதேபோல் மம்தா பானர்ஜிக்காக 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பணியாற்றவுள்ளார்.

2018ஆம் ஆண்டு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.

2019ஆம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆலோசனை வழங்கி, மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்தார்.


காபி சாப்பிட அழைத்த மோடி

Modi meet with Prashant Kishore

ஐக்கிய நாடுகள் அவையில் பொது நல அதிகாரியாக பணியாற்றிவந்த பிரசாந்த், இந்தியாவின் பொருளாதார வளம் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை பற்றிய ஒரு ஆவணத்தை தயார் செய்தார். இது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது மோடியின் கவனத்தை ஈர்த்தது, பிரசாந்தை ஒரு காபி சாப்பிட அழைத்தார். அதன்பிறகு மோடியின் அரசியல் ஆலோசகராக பிரசாந்த் மாறினார்.

பிரசாந்த் ஆலோசனையில் நடத்தப்பட்ட முக்கிய பரப்புரைகள்

மம்தா பானர்ஜியின் திதி கே போலோ (Didi Ke Bolo)

Didi Ke Bolo

திரினாமூல் காங்கிரஸ் களத்தில் பாடுபடும் தலைவர்களை மீட்டெடுக்க இது முக்கியமான பரப்புரையாக அமைந்தது.

ஜெகன் மோகன் ரெட்டியின் யாத்திரை (Praja Sankalpa Yatra)

ஆந்திராவில் உள்ள அத்தனை மாவட்டங்களுக்கும் ஜெகன் மோகன் ரெட்டி நடைபயணம் மேற்கொண்டார். இந்த 3,648 கிமீ பயணம், ஜெகன் மோகன் ரெட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Praja Sankalpa Yatra

அப்போது வெளியிடப்பட்ட ‘எங்களுக்கு ஜெகன் வேண்டும், ஜெகன் வெற்றிபெற வேண்டும்’ (Raavali Jagan Kaavali Jagan) என்ற பாடல் 2.25 கோடி நபர்களுக்கு மேல் பார்க்கப்பட்டது. தேர்தலுக்காக உருவான பாடலில் அதிகம் பார்க்கப்பட்டது என்ற பெருமையையும் பெற்றது.

நல்ல நேரம் வரப்போகிறது, மோடி வருகிறார் (Ache Din & Chai Pe Charcha)

2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக உத்தரப் பிரதேசத்தில் உள்ள 81 தொகுதிகளில் 71 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதற்கு முக்கிய காரணம் பிரசாந்தின் பரப்புரை யுக்தி, 400 ட்ரக்குகளில் உபியில் உள்ள 80,000 கிராமங்களில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. நல்ல நேரம் வரப்போகிறது, மோடி வருகிறார் என்ற செய்தி தெளிவாக பரப்பப்பட்டது.

Prashant Kishore with thackeray family

அதேபோல் மஹாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஆதித்யா தாக்கரே மேற்கொண்ட ஜன ஆசிர்வாத யாத்திரையும் பிரசாந்தின் யோசனைதான். இப்படி பல அரசியல் கட்சிகளுக்கு பாகுபாடின்றி பணியாற்றிய பிரசாந்த்தை, 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தேர்ந்தெடுத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பழ கருப்பையா திமுகவை விட்டு விலகிவிட்டார்.

இதுகுறித்து பழ கருப்பையா, ஒரு கட்சி தன்னை முன்னிலைப்படுத்தி கொள்வதற்காக தனியார் முகவர்களை பயன்படுத்துவது தமிழ்நாட்டில் இதுவே முதல் முறை. எதைச் சொன்னால் மக்கள் வாக்களிப்பார்கள் என்று மக்களை ஏமாற்றும் யுக்திகளை அந்நிறுவனத்தினர் பின்பற்றுவார்கள். இது நம் நாட்டு அரசியலுக்கு நல்லதல்ல. நடிகையை வைத்து சோப்பை விளம்பரப்படுத்துவது போல் கார்ப்ரேட் முகவர்களை வைத்து கட்சிகளை விளம்பரம் செய்வது தவறு. உண்மை இல்லாத ஒன்றை உண்மை போல், தோற்றம் செய்வது கார்ப்ரேட்டின் செயல்கள் ' எனத் தெரிவித்துள்ளார்.

பிரசாந்தை தேர்வு செய்தது திமுகவுக்கு பாதகமாக அமையுமா அல்லது சாதகமாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...

இதையும் படிங்க: பிரசாந்த் கிஷோர் தேர்வு குறித்து பழ கருப்பையாவின் முழுமையான பேட்டி

Last Updated : Dec 12, 2019, 11:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details