தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றவா? தலைமை ஆசிரியர்கள் மொபைல்ஆப்பில் பதிவேற்ற புதிய உத்தரவு! - வழிமுறைகள்

Education
Education

By

Published : Jan 20, 2021, 7:54 AM IST

Updated : Jan 20, 2021, 9:16 AM IST

07:52 January 20

சென்னை: தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து தினமும் பள்ளி கல்வித்துறையின் இணையதளத்தில் தலைமையாசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக, மார்ச் 24ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. கரோனா பரவல் தொற்று குறைந்து வந்தாலும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பதில் அரசு வேகம் காட்டவில்லை. இந்த நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முதல் (ஜன.19) பள்ளிகள் திறக்கப்பட்டன.

பள்ளிகள் திறக்கப்படும் தினமும் கரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்திலுள்ள 6,194 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும், 1,758 அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும், 4,726 மெட்ரிகுலேஷன், மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளிலும், 1,293 சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் என, 13 ஆயிரத்து 971 பள்ளிகளைத் தற்போது திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், உள்ளாட்சித்துறை அமைப்பின் மூலம் தினமும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் எனவும், பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரத்துறைச் சார்ந்த மருத்துவர்கள் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளும், தங்கள் பள்ளி வளாகத்தைப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி தினமும் சுத்தம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பள்ளிகள் பாதுகாப்பு வழிமுறைகளை முறைப்படி பின்பற்றுகின்றனர் என்பதைக் கண்டறிய பள்ளிக்கல்வித்துறை கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் புதிதாக ஆசிரியர்களுக்கு மொபைல் போனில் தகவல்களைப் பதிவேற்றம் செய்ய TN EMIS MOBILE APP உருவாக்கியுள்ளது.

பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், இன்று (ஜன.20) முதல் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

  • அதாவது உள்ளாட்சி துறையால், இன்று பள்ளி வளாகத்தில் கிருமி நாசினி மூலம் முறைப்படி சுத்தம் செய்யப்பட்டுள்ளதா?
  • உள்ளாட்சித் துறையின் மூலம் கழிவறைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப் பட்டுள்ளதா?
  • பள்ளியில் மாணவர்கள் கை தொடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளதா?
  • தெர்மல் ஸ்கேனர் கொண்டு மாணவர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறதா?
  • பள்ளி வளாகத்தில் நுழைவதற்கு முன்னர் மாணவர்கள் ஆசிரியர்கள் பணியாளர்களின் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதா?
  • பள்ளிக்கு போதுமான அளவில் சோப்பு மற்றும் கிருமி நாசினிகள் உள்ளதா?
  • பள்ளியில் மாணவர்கள் எளிதில் தொடர்பு கொள்வதற்கான மக்கள் நல்வாழ்வுத் துறையின் உதவி எண்கள் அளிக்கப்பட்டுள்ளதா? அது மாணவர்களுக்குத் தெரியும் வகையில் எழுதப்பட்டுள்ளதா?
  • மதிய உணவினை மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சாப்பிடுகிறார்களா?
  • பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் எத்தனை மாணவர்கள் இன்று அமர்த்தப்பட்டுள்ளனர்?
  • பள்ளிக்கு வந்துள்ள மாணவர்களில் யாருக்காவது இன்று காய்ச்சல் இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தனவா?
  • சுகாதாரத்துறை சார்ந்த மருத்துவர்கள் பள்ளியில் எத்தனை முறை பரிசோதனை மேற்கொண்டனர் போன்ற 24 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்குப் பதில் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் துறை, மக்கள் நல்வாழ்வு துறை பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து மாணவர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனவா?என்பதை எளிதில் கண்டறிவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளன.

Last Updated : Jan 20, 2021, 9:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details