சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் உள்ள 24,341 இடங்களுக்கான சேர்கை விண்ணப்பம் குறித்த வழிகட்டுதல்களை உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்திக் வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மையங்களின் விபரத்தையும் www.tngasa.in மற்றும் www.tngasa.org முகவரியில் தெரிந்துக் கொள்ளலாம்.
ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.58, பதிவுக் கட்டணமாக ரூ.2 செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்டி பிரிவு மாணவர்கள் பதிவு கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card/Credit Card/Net Banking/UPI மூலமாகவும் இணையதள மூலமாகவும் செலுத்தலாம்.