சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் லிங்கம் (29). இவர் செப்டம்பர் 27ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாகக் கூறி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் மீது இருந்த காயங்கள் அனைத்தும், ஆயுதங்களால் வெட்டப்பட்டதுபோல இருந்ததால் மருத்துவர்கள் சந்தேகமடைந்து அமைந்தகரை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, தனது பெயர் கணேசன் எனவும், இரண்டு தினங்களுக்கு முன்பு மும்பையிலிருந்து தனது மனைவி, குடும்பத்தாரைப் பார்ப்பதற்காக சென்னை வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கஞ்சா வாங்குவதற்காக செனாய் நகர் அருகே நண்பர் ஒருவருடன் சென்றபோது, அங்கு மறைந்திருந்த பிரபல பெண் கஞ்சா வியாபாரி கிருஷ்ணவேணியின் பேரன் சந்திரசேகரன் (26), அவரது நண்பர்கள் தன்னை கத்தியால் வெட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
பின்பு அங்கிருந்து தப்பி சேத்துப்பட்டிலுள்ள தனது வீட்டிற்குச் சென்றதாகவும், பிறகு சகோதரி உஷாவின் உதவியோடு மருத்துவமனையில் சேர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட காவல் துறையினர், செனாய் நகர் பகுதியில் விசாரணை மேற்கொண்டபோது, லிங்கம் கஞ்சா புகைக்கச் சென்றபோது அங்கு மறைந்திருந்த சந்திரசேகரன் (26), நிலேஷ் குமார் (22), விசுவாசம் (19), பாபா (19) ஆகியோர் வெட்டியது தெரியவந்தது.