சென்னை: வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'தேஜாவு'. இப்படம் ஜூலை 22 அன்று வெளியானது.
இந்நிலையில் ஊடகங்கள், விமர்சகர்கள், மற்றும் பொது மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற 'தேஜாவு' படத்தின் வெற்றியை இன்று படக்குழுவினர் கொண்டாடினர்.
இது குறித்து நடிகர் அருள்நிதி கூறுகையில், "இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். "தேஜாவு" படத்தின் தயாரிப்பாளர் விஜய் பாண்டி இப்படத்தினை நன்றாக விளம்பரப்படுத்தி பொது மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்த்து இதனை வெற்றி படமாக்கியுள்ளார். இத்தருணத்தில் அவருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசனுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சி. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் "தேஜாவு" திரைப்படம் ஒரு நல்ல அடையாளமாக இருக்கும். இப்படத்தை வெற்றி படமாக்கிய அனைவருக்கும் நன்றி" என்று கூறினார்.
படத்தின் வெற்றி குறித்து படத்தின் தயாரிப்பாளரான விஜய் பாண்டி தெரிவிக்கையில், "எனது நிறுவனத்தின் முதல் திரைப்படமே தரமான வெற்றி படமாக அமைந்ததில் பெரும் மகிழ்ச்சி. இப்படத்தினை எனக்கு அளித்த அருள்நிதி, இதனை தரமான படமாக அளித்த இயக்குநர் அரவிந்த் மற்றும் படக்குழுவினருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இப்படத்தின் டீசர், டிரைலரை வெளியிட்டு படத்திற்கு பெரும் வரவேற்ப்பை பெற காரணமாக இருந்த உதயநிதி ஸ்டாலின், பட வெளியீட்டிற்கும் பெரும் உதவி புரிந்த ரெட் ஜெயண்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் M. செண்பகமூர்த்தி, C. ராஜா மக்களிடத்தில் கொண்டு சேர்த்த பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், வெற்றி படமாக்கிய மக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.
இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன், 'மைம்' கோபி, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசைமைப்பாளராக பணியாற்றியுள்ள இப்படத்திற்கு PG முத்தையா ஒளிப்பதிவையும், அருள் சித்தார்த் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் - 5 பேருக்கு ஒருநாள் சிபிசிஐடி காவல்