சென்னை:இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75 ஆம் ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (நவ-12) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆந்திர மாநில நிதியமைச்சர் புக்கண்ணா ராஜேந்திரநாத் ரெட்டி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீனிவாசன், எம்.எஸ்.தோனி, ஓபிஎஸ், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி. அரசு சார்பாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாகவும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள் நான், அவர்கள் சார்பாக வாழ்த்தவும் விரும்புகிறேன். இந்தியாவில் சிமெண்ட் உற்பத்தித் துறையில் உங்கள் வளர்ச்சி, எங்களையும் பெருமையடையச் செய்கிறது. திருநெல்வேலியின் ஒரு கிராமத்தில் தொடங்கிய இந்தப் பயணம், மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது" என கூறினார்.
விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘விழாவில் பங்கேற்றறிற்கும் அனைத்து ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் விளையாட்டுத்துறையை சேர்ந்தவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் சீனிவாசனுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் என்னுடைய நண்பர். ஏனெனில் 75 ஆண்டுகாலம் ஒரு நிறுவனம் வந்து பூர்த்தி செய்கிறது என்றால் அந்த துறையில் மிகப்பெரிய லீடராக இருக்கிறது என்று அர்த்தம். அவருக்கு என் நல்வாழ்த்துக்கள்.
முதலில் நன்றி சொல்கிறேன் என்று சொல்லி இருந்தார். நான் அவரிடம் சொல்கிறேன். நட்புக்கு இடையில் நன்றி உணர்வே தேவையில்லை. நமக்குள்ளே இருக்கிற அந்த நட்புக்காக நீங்கள் நன்றி சொல்ல வேண்டாம். கிரிக்கெட் தொடர்பாக எங்களுக்குள்ள ஒரு நல்ல உறவு வளர்ந்து கொண்டு இருந்தது. விளையாட்டுத்துறையை பொறுத்த வகையிலே அவருடைய சிறப்பு அம்சம் என்னவென்றால் எத்தனை வாய்ப்புகள் இருக்கிறதோ அத்தனை வாய்ப்புகளையும் 100% வெற்றியாக மாற்றக்கூடிய திறமை திரு சீனிவாசன் அவர்களுக்கு உண்டு. அதே போல விளையாட்டு வீரர்களுக்காக அதிகம் அவர் நலனுக்காகவும் உயர்வுக்காகவும் பாடுபட்டவர் திரு சீனிவாசன் அவர்கள். இன்று இந்தியா சிமெண்ட் 75 ஆம் ஆண்டு மிக பெரிய இலக்கை எட்டி இருக்கிறது.
எந்த தேசத்திலும் நாட்டின் வளர்ச்சி கட்டமைப்பை பொறுத்துதான் இருகிறது. நம் நாட்டிற்கு தேவையான சிமெண்டை சுயமாக தயார் செய்து கொண்டு இருக்கிறார்கள். சிமெண்ட்துறையில் மட்டுமின்றி ஏற்றுமதி,கப்பல் துறை போன்ற வற்றிலும் முத்திரையை பதித்து கொண்டு இருக்கிறார்கள். நம்முடைய நாடு வளர்ச்சி பாதையை நோக்கி வளர்ந்து கொண்டு இருக்கிறது. 2025ம் ஆண்டில் இந்தியாவின் மதிப்பு 5 டிரிலியன் டாலரில் இருக்கும். ஒரு ஆய்வு அறிக்கையில் 2027 ம் ஆண்டு தரவரிசை பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கும்.