சென்னை: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், போக்குவரத்திற்கு இடையூறாக நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கேட்பாரற்ற வாகனங்களை அதன் உரிமையாளர்கள் உடனடியாக அப்புறப்படுத்தவில்லை என்றால் காவல் துறை மூலம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி விடுத்துள்ள அறிவிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருவோரங்கள் மற்றும் சாலைகளில் கைவிடப்பட்ட வாகனங்கள், (Abandoned Vehicles) பொதுமக்களுக்கு பெரும் இடையூறாகவும், போக்குவரத்து நெரிசலுக்கும் வழிவகுக்கிறது. மேலும், அப்பகுதி குப்பைகளை கொட்டும் பகுதிகளாக உருவாவதால், சாலைகளை முறையாக சுத்தம் செய்ய இயலாத நிலையும் ஏற்படுகிறது. இதனால், கைவிடப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து அடையாளம் கண்டு அவற்றினை அகற்ற தகுந்த நடவடிக்கை, மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட இருக்கிறது.
இதன், முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், போக்குவரத்திற்கு இடையூறாக நீண்ட நாட்களாக சாலைகள் மற்றும் பொது இடங்களில் கேட்பார் அற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களை பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர சென்னை காவல்துறை அலுவலர்களால் உடனடியாக அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே, சாலையோரங்கள், நடைபாதைகள், தெருக்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் உரிமையாளர்கள், இன்னும் 15 நாட்களுக்குள் தாமாகவே முன்வந்து உடனடியாக வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.