சென்னை:நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் 2022ஐ முன்னிட்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பாதயாத்திரை, சைக்கிள், வாகன பேரணிக்கு கரோனா காரணமாக வரும் 11ஆம் தேதி வரை அனுமதியில்லை. அதன்படி, கூட்டம் நடைபெறும் இடம் உள்ளரங்கமாக இருப்பின் 50 விழுக்காடு திறன் அடிப்படையிலும் மற்றும் திறந்தவெளி அரங்கமாக இருப்பின் 30 விழுக்காடு திறன் அடிப்படையிலும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி பெற்று பரப்புரைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திறந்தவெளி இடங்களில் கூட்டம் நடத்திட ஏதுவாக 136 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விவரங்கள் மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/citizen-details/public_meeting_location/ என்ற இணையதள இணைப்பில் மண்டல வாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சார அனுமதி தொடர்பாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். கூட்டம் நடத்தும் நபர்கள் சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கூட்டம் நடைபெறும் நாள், நேரம் போன்ற விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஒரே இடத்தில் ஒரே நாளில் ஒன்றிற்கு மேற்பட்ட நபர்கள் கூட்டம் நடத்த விண்ணப்பித்தால் முதலில் விண்ணப்பித்த நபருக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.