சென்னை:திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி சில கருத்துக்களைக் கூறினார். அந்த கருத்துக்கள் காமராஜர் சொன்னது இல்லை என்று பல நாடார் சங்கங்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தது. அதன்படி நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் சார்பாக, அனைத்து நாடார் சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் நவம்பர் 1ஆம் தேதி ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும் நாடார் சங்கங்களில் முக்கிய தலைவர்கள் மேல்சட்டை இல்லாமல் தலைமைச் செயலகத்தை முற்றுகை இடப் போவதாகவும் தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காமராஜர் பற்றி நான் பேசியதை வெட்டி, ஒட்டி சொல்லி இருக்கிறார்கள். மேலும் நான் சொன்ன கருத்துக்கள் யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் தலைவர் தா.பத்மநாபன் தலைமையில் ஆலந்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டதாகத் தெரிவித்தனர். மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து நாடார் சங்கங்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.