தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணி ஆணையின்றி ஆளுங்கட்சியினர் குடிமராமத்து வேலை: குண்டு பெரும்பேட்டில் பரபரப்பு! - Citizenship Work

சென்னை: குண்டு பெரும்பேட்டில் உள்ள ஏரியின் குடிமராமத்து வேலையை ஆளுங்கட்சியினர் பணி ஆணை இல்லாமல் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடிமராமத்து பணி
குடிமராமத்து பணி

By

Published : Jun 27, 2020, 7:24 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்குள்பட்ட குண்டு பெரும்பேடு ஊராட்சியில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இதன்மூலம் இப்பகுதியில் உள்ள ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன் அடைவதுடன், குடிநீருக்கு ஆதாரமாகவும் விளங்கிவருகிறது.

பல ஆண்டுகளாக இந்த ஏரியில் தூர்வாராமல் வரத்து கால்வாய் கலங்கள் உள்ளிட்டவை முழுவதுமாகச் சேதமடைந்துள்ளன. இதனால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறிச் செல்கிறது.

இந்நிலையில் குண்டு பெரும்பேடு ஏரியை குடிமராமத்துப் பணியில் சீரமைக்க ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உள்ளூர் விவசாயிகள் மூலம் சங்கம் அமைக்கப்பட்டு அதன்மூலம் குடிமராமத்துப் பணி மேற்கொள்ளப்படும் எனப் பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் திடீரென கிராம விவசாயிகள் அமைத்த விவசாய சங்கத்தை ரத்து செய்துவிட்டு ஆளுங்கட்சியைச் சேர்ந்த நபர்களுக்கு குடிமராமத்துப் பணியை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் விவசாயிகள் ஏரியின் கலங்கள் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதன்பின் உள்ளூர் விவசாயிகள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் குடிமராமத்துப் பணிகளுக்கான விவசாய சங்கம் அறிவிப்பதில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் அளித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் விசாரித்து தக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். இதற்கிடையில் நேற்று திடீரென்று குடிமராமத்துப் பணியை ஆரம்பிப்பதாக குண்டுபெரும்பேடு அதிமுகவின் கிளைச் செயலாளரும், கூட்டுறவு வங்கியின் தலைவருமான ரவி என்பவர் ஆள்களோடு வந்து குடிமராமத்துப் பணியை ஆரம்பிக்க முயற்சித்துள்ளார்.

அவரிடத்தில் உள்ளூர் விவசாயிகள் பணி ஆணையை கேட்டதாகவும் அதற்கு, ரவி முன்னுக்குப்பின் முரணாகவும், அடாவடியாக பேசி மிரட்டியதாகவும் அப்பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பணி ஆணை இல்லாமலேயே குடிமராமத்துப் பணிகளை ஆளுங்கட்சியினர் பொதுப்பணி துறை அலுவலர்கள் துணையோடு ஆரம்பிக்க முயற்சிப்பதால் அப்பகுதியில் முற்றுகை போராட்டமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

ஆளும் அரசு தங்களை வஞ்சிப்பதாகக் குமுறும் விவசாயிகள், தங்கள் குறைகளையும் தாங்கள் ஏமாற்றப்படுவதையும் யாரிடம் கூறுவது என வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:'விவசாயிகள் தங்களது வருவாய் தீர்வாயம் தொடர்பான புகார்களை இணையதளத்தில் பதிவேற்றலாம்'!

ABOUT THE AUTHOR

...view details