சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, அதிமுக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “நரிக்குறவர்கள் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாதான். மீனவர்கள் இனத்தையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அதிமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தியது.
ஆனால் திமுக அரசு இதுகுறித்து எதையும் செய்யவில்லை. அண்ணா வழியில் ஆட்சி நடத்துவதாக சொல்லும் திமுக அரசு, எதிர்கட்சிகளை முடக்கும் நோக்கத்தில் செயல்படுகிறது. பெயர் சூட்டுவதில் மட்டுமே பிரம்மாண்டம் காட்டுகிறது, திமுக அரசு.