தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மயான அமைதி காக்காமல் மீனவர்கள் நலன்காக்க முதலமைச்சர் முயற்சிக்க வேண்டும்' - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்திவைக்கத் தூதரகத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி மயான அமைதி காக்காமல் பிரதமரைத் தொடர்புகொண்டு தமிழ்நாடு மீனவர்கள் நலன்காக்க அவசர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

மயான அமைதி காக்காமல் மீனவர்கள் நலன்காக்க முதலமைச்சர் முயற்சி மேற்கொள்ளவேண்டும்- துரைமுருகன் வேண்டுகோள்
மயான அமைதி காக்காமல் மீனவர்கள் நலன்காக்க முதலமைச்சர் முயற்சி மேற்கொள்ளவேண்டும்- துரைமுருகன் வேண்டுகோள்

By

Published : Nov 9, 2020, 8:43 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மீனவர்களிடமிருந்து இலங்கை கடற்படை சட்டவிரோதமாகப் பறிமுதல் செய்த 121 படகுகளை உடைத்து நொறுக்குவதற்கு இலங்கையில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

கடன் வாங்கி - தங்கள் வாழ்வாதாரத்திற்காக வாங்கியுள்ள இந்தப் படகுகளை அழிப்பது என்பது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலாகும். பாரம்பரிய மீன் பிடி உரிமையின் அடிப்படையில் மீன் பிடித்த ஒரே காரணத்திற்காக இலங்கை அரசு இவ்வாறு தமிழ்நாடு மீனவர்களைக் கொடுமைப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது.

கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும் உயிருடன் திரும்பி வருவோமா என்கிற அளவில் இலங்கைக் கடற்படையினரின் வன்முறை, கல் வீசித் தாக்குதல் என மீனவர்கள் படும் துயரத்திற்கு எல்லையே இல்லை.

அது போதாது என்று படகுகளையும் பறித்து வைத்துக் கொண்டு - இவ்வாறு நீதிமன்றங்கள் மூலம் ஆணை பெற்று படகுகளை அழிப்பது எந்த விதத்தில் நியாயம்? இப்படியொரு அக்கிரமத்தை - அநியாயத்தை மத்திய பாஜக. அரசும் - மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் வேடிக்கை பார்ப்பது தகுமா?

இந்தியப் பிரதமரோ, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரோ தமிழ்நாடு மீனவர்களுக்கு நீதி கிடைக்க முயற்சியும் எடுக்கவில்லை - மீன்பிடி உரிமையையும் நிலைநாட்டித் தரவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

ஆகவே 121 படகுகளை அழிக்கும் இலங்கை நீதிமன்ற ஆணையை நிறுத்தி வைக்க இலங்கை அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி - இலங்கையில் உள்ள நமது தூதரகத்தின் மூலம் உரிய முறையில் மேல்முறையீடு செய்து படகுகள் உடைக்கப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கை நீதிமன்றத்தில் உள்ள படகுகளை – உரிய பழுது பார்த்து மீண்டும் அவற்றைத் தமிழ்நாடு மீனவர்களிடம் ஒப்படைக்க இலங்கை அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்கவும், தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடி உரிமையைப் பாதுகாக்கவும் போர்க்கால நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

மீனவர்களின் உயிர் போன்ற படகுகளை அழிக்கும் போதும் மயான அமைதி காக்காமல் - முதலமைச்சர் பழனிசாமி பிரதமரை உடனே தொடர்பு கொண்டு மீனவர்கள் நலன் காக்கும் முயற்சிகளில் அவசரமாக ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details