சென்னை: திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி குப்பத்தில் கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகம் அமைப்பதற்காக தங்களது இடத்தை கொடுத்தது தொடர்பாக 140 மீனவக் குடும்பங்களின் உறுப்பினர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை ஒன்றினை வைத்துள்ளனர்.
அதில், ”2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசும் எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனமும் இயற்றிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இங்கு மிகவும் கொடுமையான நம்பிக்கை துரோகம் நடந்து கொண்டிருக்கிறது. அதனைத் தமிழ்நாடு முதலமைச்சரால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும்.
மேலும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு உதவுவதற்காக திருவள்ளூர் மாவட்டத்தின் காட்டுப்பள்ளி குப்பத்தை சேர்ந்த மீனவர்களுக்கு தங்களின் அரசு துரோகம் செய்தது என்று வரலாற்றில் பதிவாக விட்டு விடாதீர்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
140 மீனவக் குடும்பங்களுக்கு ஏமாற்றம்: மேலும், இது குறித்து சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் சென்னை ஆதரவு குழுவைச் சேர்ந்த நித்தியானந்த் ஜெயராமன், சமூக ஆர்வலர்கள் டி.எம் கிருஷ்ணா, வழக்கறிஞர் ராம ப்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பேசுகையில், "எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனத்திற்காக நாங்கள் 2009இல் அங்கிருந்து வெளியேற்றப்பட்டோம்.
இதன் காரணமாக நாங்கள் மீன்பிடித்து வந்த வளமான கடலும் வீடுகளும் எங்களுக்கு இல்லாமல் போயின. மேலும் எங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டுவதற்காக மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வு திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ்நாடு அரசும் எல்&டி கப்பல் கட்டும் நிறுவனமும் இயற்றிய ஒப்பந்தத்தின்படி 140 மீனவக் குடும்பங்களில் இருந்து தலா ஒருவருக்கு நிரந்தர வேலை அளிப்பது என்று உறுதிமொழி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கம்பெனிகள் தாங்கள் அளித்த உறுதிமொழிக்கு துரோகம் செய்து விட்டனர். மேலும் ஒப்பந்தத்தை மீறுவது மீனவர்களின் துயரத்தை அதிகப்படுத்துவதோடு, அரசின் தொழில்மயமாக்கல் கொள்கைக்கும் தடையாக மாறும் என்று பிரபலமான குடிமக்கள் 15 பேர் அரசை எச்சரிக்கை செய்துள்ளனர். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் இப்பிரச்னையில் நேரடியாக தலையிட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறோம்.