சென்னை:அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனிற்காக பள்ளிகளில் இணைய வசதிகளையும், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து, தமிழ்நாட்டின் கல்வித் தரத்தினை உயர்த்திட இல்லம் தேடி கல்வி, நம் பள்ளி நம் பெருமை, எண்ணும் எழுத்தும், நம்ம ஸ்கூல் பவுண்டேசன், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு போன்ற சிறப்பு திட்டங்கள், பள்ளிகளின் வகுப்பறைக் கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள், மின்சாதன வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், திறன் வகுப்பறைகள் அமைத்தல், காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
தற்போதைய, தொழில்நுட்ப உலகிற்கு ஏற்ற வகையில் மாணவர்களைத் தயார்படுத்துதல் அவசியம் ஆகும். தொழில்நுட்ப உள்கட்டமைப்பை வழங்குவதன் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்துள்ள தமிழ்நாடு அரசு, மாணவர்களுக்கு பொருத்தமான கற்றல் சூழலை உருவாக்குவதற்கு அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை நிறுவவும், அனைத்து அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளை அமைக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் வரவு செலவு திட்ட அறிக்கைகளில் 20,000 திறன் வகுப்பறைகள் 400 கோடி செலவில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பின்படி, அனைத்து அரசு மேல்நிலை, உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தொகுதியான ராதாபுரம் தொகுதியில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மற்றும் பிற நிதியிலிருந்து 6 கோடியே 86 இலட்சம் ரூபாய் செலவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை, உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 303 திறன் வகுப்பறைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.