சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழுவினர் நேற்று(டிச.11) சென்னை வந்தது. அதனைத்தொடர்ந்து இன்று(டிச.12) தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுடன் மத்தியக் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனையில், சென்னை பெருவெள்ளப் பாதிப்புகளைச் சரிசெய்வதற்காக சிறப்பு நியமனம்(பொறுப்பு) செய்யப்பட்ட செயலாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது எனவும், மின்வாரியத்துறை மற்றும் மாநகராட்சி சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், சுகாதாரத்துறை சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும், தாழ்வானப் பகுதிகளில் நிரந்தரமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பதையும் மத்தியக் குழுவினர் கேட்டறிந்தனர்.
அதைத்தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட சென்னை வேளச்சேரி எ.ஜி.எஸ் காலனி, புளியந்தோப்பு, சாய் பாலாஜி நகர், அம்பேத்கர் கல்லூரி பின்புறம் உள்ள கனேசபுரம், மோதிலால் நகர் உள்ளிட்ட தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில், ரங்கநாத் ஆடம், திமான் சிங் ஆகியோர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி, “சென்னையில் மத்திய அரசின் சார்பாக தலைமை தாங்கி, இங்குள்ள அதிகாரிகளுடன் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்வதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பாக ஆறு பேர் கொண்ட குழுவுடன் இங்கு வந்துள்ளோம்.
இந்திய பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் ஆலோசனைப்படி, சென்னை மற்றும் சுற்றுப்பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, அது குறித்து அறிந்து கொண்டோம். இந்தப் பாதிப்பு மிக மோசமாகக் காணப்பட்டது.