சென்னை:தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி விக்னேஷ் மரணமடைந்த சம்பவம் சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை:நேற்று(ஏப்.26) இரவு காவல் நிலையத்திற்கு விசாரணை அலுவலர் டிஎஸ்பி சரவணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட நிலையில் இன்று தடயவியல் துறை மற்றும் டிஎஸ்பி தலைமையிலான சிபிசிஐடி காவல்துறையினர் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளனர்.
குறிப்பாக காவல் நிலையத்தில் எந்தப்பகுதியில் விக்னேஷ் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட சுரேஷ் வைக்கப்பட்டிருந்தனர் என தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து அந்தப் பகுதியை புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் அங்குள்ள ரத்தக்கரை மாதிரிகளையும் சேகரித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட போது பறிமுதல் செய்யப்பட்ட கத்தி அல்லது பிளாஸ்டிக் பைப் போன்றவை அங்கு உள்ளனவா என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடயவியல் துறையினர் ஆய்வு:சிபிசிஐடி காவல்துறையினர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தடயவியல் துறை அலுவலர்கள் காவல் நிலையம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு மாதிரிகளை சேகரித்து உள்ளனர். இதன்பிறகு ஆய்வகத்திற்கு எடுத்துச்செல்லப்படும் மாதிரிகள் ஆய்வுக்குப் பின் அறிக்கை தயார் செய்யப்பட்டு இந்த வழக்கு விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள டிஎஸ்பி சரவணனிடம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிபிசிஐடி காவல்துறையினர் காவல் நிலையத்தில் விக்னேஷ், சுரேஷ் கைது செய்யப்பட்ட அன்று பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்கள் மற்றும் அன்றைய தினம் தலைமைச் செயலக காலனி காவலர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள ஆவணங்களையும் கைப்பற்றி ஆய்வு செய்துள்ளனர்.
காவலர்களுக்கு சம்மன்:இதையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் புகழும் பெருமாள், பொன்ராஜ் மற்றும் ஊர்க்காவல் படை தீபக் ஆகிய மூன்று பேருக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் விக்னேஷின் சகோதரர் உள்ளிட்ட குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தப்படும் என சிபிசிஐடி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காப்பாற்ற சென்றவரும் உயிரிழந்த பரிதாபம்.. தஞ்சை தேர் விபத்தின் கோரம்...