சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ஆம் தேதி நடந்த வன்முறையைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி கட்சி அலுவலகத்துக்குச் சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
இதனை ரத்து செய்யக்கோரியும், இந்த உத்தரவுக்கு தடை விதித்து, கட்சி அலுவலகத்தை ஒப்படைக்க கோரியும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், 'பொதுக்குழுவின்போது கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பாதுகாப்புக்கோரி கட்சியின் அமைப்புச்செயலாளர் ஜெயக்குமார், மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தும், பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆட்களுடன் கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதுடன், அங்கிருந்த கோப்புகளை எடுத்துச்சென்றுள்ளார் எனக் குற்றம்சாட்டியுள்ளார். இதுசம்பந்தமாக புகார் அளித்தும், காவல் துறையினர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டு, அதிமுகவினர் 14 பேரை கைது செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தைச் சீல் வைத்ததை ரத்து செய்யவேண்டும்:சொத்து உரிமை தொடர்பாக பிரச்னை இருந்தால் மட்டுமே சீல் வைப்பதற்கான சட்டப்பிரிவுகளை அமல்படுத்த முடியும் எனவும், அதிமுக தலைமை அலுவலகத்தைப் பொறுத்தவரை, சொத்து உரிமை தொடர்பாக எந்தப் பிரச்னையும் இல்லை எனவும், கட்சியின் தலைமை நிலையச் செயலாளர், இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சி அலுவலகத்தின் உரிமை தனக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.