சென்னை: திருமுல்லைவாயில் பகுதியில் வசிக்கும் மின்னல் கொடி என்பவரின் 17 வயது மகன் அரும்பாக்கம் சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். காலாண்டு தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்த பிறகு வயிற்று வழி காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த கடந்த 27ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனுக்கு சிறு குடலில் ஓட்டை இருப்பதாக கூறி முதல் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும், கடந்த 5ஆம் தேதி மீண்டும் இரண்டாவது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது எனவும் கூறப்படுகிறது.
இரண்டு அறுவை சிகிச்சைகளுக்கு பின்னும் சிறுவன் ஹரி கிருஷ்ணன், உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை என மருத்துவர்கள் கூறி வந்ததாகவும், 8 ஆம் தேதி மாலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாயார் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான் தன் மகன் இறந்து விட்டதாக குற்றம் சாட்டினார். இது குறித்து செய்தியாளர்களிடம் மின்னல் கொடி கூறுகையில்;
காலாண்டு பரிட்சை முடிந்து வீட்டிற்கு வந்த மகன் உடல்நிலை சரியில்லாததால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அங்கே அவருக்கு வயிறு இருகியுள்ளாதால் இணிமா கொடுக்க வேண்டும் என பெரிய மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தியதன் பேரில், சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம்.
இங்கே அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்த போது, வயிற்றில் சிறு குடலில் ஓட்டை உள்ளது எனவும், அதனால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். எனவே கடந்த 27 ஆம் தேதி என் மகனுக்கு முதல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டத்தை தொடர்ந்து, தொப்புள் பகுதியில் இருந்து இரத்தம் மற்றும் தண்ணீர் வடிந்து வந்ததால் மருத்துவர்களிடம் கேட்ட போது, முதலில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை சரியில்லை எனவும், மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்கள்.
அதன் படி கடந்த 5 ஆம் தேதி மீண்டும் இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் ஒட்டுவதற்கு பிளாஸ்தரி கூட இல்லாமல், என்னிடம் சர்ஜிகள் பிளாஸ்டர் வாங்கி வர சொன்னார்கள். நானும் வெளியே சென்று வாங்கி கொண்டுவந்தேன்.
இதுகுறித்து நான் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களை தொடர்பு கொண்ட போது, அவர் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் சாந்தி மலரை கவனிக்க உத்தரவிட்டுள்ளதாக சொன்னார். அதன் படி அவர்களை பார்த்த போது அவரது உதவியாளர் என்னிடம் பேசினார். என் மகனுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
ஆனால் அதன் பிறகு கூட இங்கே அடிக்கடி மருந்துகள் இல்லை என என்னிடம் வாங்கி வர சொன்னார்கள். நான் வாங்கி வரும் மருந்துகளை கூட அவர்கள் உபயோகிக்கவில்லை. வாங்கி வந்த மருந்துகலை உபயோகிக்கவில்லையா என கேட்ட போது கூட, உங்கள் வேலையை பாருங்கள் என சொன்னார்கள்.
மேலும் என் மகனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் அவரது பெயர் குறித்து கேட்ட போது அவர்கள் சொல்லவில்லை. குழந்தை எப்படி இருக்கிறார் என மட்டும் கேளுங்கள் என சொன்னதை அடுத்து, குழந்தையை பற்றி கேட்டேன். நேற்று 8 ஆம் தேதி அவருக்கு வென்டிலேட்டர் எடுக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக என்னிடம் சொன்னார்கள். அதன் படி என் மகன் சற்று உறங்க வேண்டும் என்பதற்காக மயக்க மருந்து கொடுக்க வேண்டி நான் சொன்ன போது, மயக்க மருந்து கொடுத்து உறங்க வைத்தார்கள்.
3 மணி நேரம் மயக்க மருந்து கொடுத்த பின் உறங்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்திய பின்பும், 3 மணி நேரம் ஆவதற்குள்ளாகவே உள்ளே சென்று பார்த்த போது அவருக்கு வென்டிலேட்டர் எடுத்து மூச்சு இழுத்து விட சொல்லி அறிவுறுத்தி வந்தனர். ஏன் என கேட்ட போது, எல்லாம் சரி ஆகி விடும் என சொன்னார்கள்.
இதற்கு முன்பாக தான், என்னை அழைத்து என்னிடம் என் மகனுக்கு நன்றாக சிகிச்சை அளிக்கப்பட்டது, மருத்துவர்கள் என் மகனை நன்றாக பார்த்து கொண்டார்கள் என என் கைப்பட எழுதி தர சொல்லி மிரட்டினார்கள். அதன் பின் என்னை டீன் அறைக்கு அழைத்து சென்று விட்டார்கள்.
அதன் பின்பு நான் என் மகனை வந்து பார்த்த பின், அவர் மூச்சு இழுத்து விட தொடர்ந்து முயற்சிக்கும் போது அவர்கள் என்னிடம் கையெழுத்து வாங்க சொல்லி கூறினார்கள். கடந்த இரண்டு நாட்களாக என்னை இந்த மருத்துவ மனையின் டீன் சாந்தி அம்மா, நான் அமைச்சரை தொடர்பு கொண்டதற்காக மிரட்டி கொண்டே இருந்தார். ஆனால் கையெழுத்து வாங்கிய போது என்னிடம் மகனுக்கு நன்றாக சிகிச்சை அளிக்க பட்டு வருவதாக சொன்னார்கள்.
அவர்களை சந்தித்து விட்டு என் மகனை வந்து பார்த்த போது என் மகனுக்கு மூச்சு விட இயலவில்லை. அவனை கவனிக்க ஒரு செவிலியர் மட்டுமே போராடி கொண்டு இருந்தார். பணியில் இருந்த பொறுப்பு மருத்துவரிடம் அவனை கவனிக்க சொன்ன போது அவனுக்கு ஒன்றும் இல்லை என கூறினார்கள். கொஞ்ச நேரத்திற்கு பிறகு என் மகனின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக சொன்னார்கள். சிறிது நேரம் கழித்து என் மகன் இறந்து விட்டதாக என்னிடம் சொன்னார்கள்.
இதனை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. இது முழுக்க முழுக்க மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லாததாலும், மருந்துகள் பற்றாக்குறை மற்றும் மருத்துவர்களின் அலட்சியத்தால் நேர்ந்த ஒன்று. ஒரு மருத்துவ துறை அமைச்சரிடம் பரிந்துரைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டும் கூட என் மகனை கவனிக்க தவறிய இவர்கள், ஏழை எளிய மக்களை எவ்வாறு சிகிச்சைக்கு உட்படுத்தி பார்த்துக் கொள்வார்கள்?
எனவே என் மகனின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உயிரிழந்த ஹரி கிருஷ்ணன் தாயார் மின்னல் கொடி கூறினார்.
இதையும் படிங்க:குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை - இறந்த நிலையில் மீட்பு