சென்னை:இந்தியாவையே உலுக்கிய மதுரை ரயில் நிலைய தீ விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் நேற்று (ஆகஸ்ட். 26) நிறுத்து வைக்கப்பட்டு இருந்த சுற்றுலாப் பயணிகளின் ரயில் பெட்டி திடீரென தீப்பிடித்து எரிந்ததைத் தொடர்ந்து, ரயிலில் பற்றிய தீ அருகே இருந்த மற்றொரு ரயிலுக்கும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் தீ பற்றிய ரயிலில் இருந்து பலரும் உயிர் தப்பிய நிலையில், சிலர் மட்டும் வெளியேற வழியின்றி ரயிலின் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். சம்பவத்தைத் தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் ரயில் பெட்டிகளில் பரவிய தீயை போராடி அணைத்தனர்.
இருப்பினும், இந்த விபத்தில் 5 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்திற்கான முக்கிய காரணமாக, ரயிலில் சட்ட விரோதமாக சிலிண்டரை பயன்படுத்தியதே என ரயில்வே தரப்பில் இருந்து விபத்தின் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் உயிரிழந்த 9 பேரில், 7 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், மீதம் உள்ள இரண்டு பேர் குறித்த விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை உடற்கூராய்வு செய்து, பின்னர் எம்பாமிங் செய்யப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.