சென்னை:சென்னை - மத்திய அரசின் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை வெளியிட்டுள்ள வரைபடத்தில் தமிழ்நாட்டில் 512 மீனவ கிராமங்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ்நாடு முழுவதும் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தென் இந்திய மீனவர்கள் நல சங்க தலைவர் பாரதி உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து திருமுருகன் காந்தி பேசுகையில், “ஒன்றிய அரசின் கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை திட்டம் அடிப்படையில் கடற்கரை ஓரம் இருக்கும் மீனவ கிராமங்கள், வாழ்வாதார இடங்கள் கணக்கெடுக்கும் முயற்சியில் வரைபடம் தயாரிக்கப்பட்டது. ஆவணப்படுத்தும் திட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.
மேலும், மாமல்லபுரம் மீனவ பகுதி, பூம்புகார், கன்னியாகுமரியில் உள்ள மீனவ கிராமங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இடம் பெறவில்லை. புதுச்சேரியிலும் இந்த நிலை தான் உள்ளது. குறிப்பாக சின்ன கொட்டாய் மேடு, பட்டன மருதூர், முத்தையாபுரம், கிளிஞ்சல் மேடு உள்ளிட்ட பல முக்கிய பெரிய பகுதிகள் இல்லை.
தொடர்ந்து பேசிய திருமுருகன் காந்தி, கிராமங்களை விற்று விட்டீர்களா? என கேள்வி எழுப்பினார். மேலும், இவர்கள் எப்போது தேச பக்தி பற்றி பேசுவார்கள்? எனவும், சாகர்மாலா திட்டம் மோடி அரசு வந்த பின் அறிவிக்கப்பட்டது எனவும், இதற்காக கடற்கரை ஒழுங்குமுறை சட்டத்தை திருத்தினார்கள் எனவும், பெரும் நிறுவனங்கள் கடற்கரை பகுதியை பயன்படுத்த வேண்டும் என்பதற்கு தான் இந்த கிராமங்கள் எல்லாம் நீக்கப்பட்டு உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மீனவர்கள் பெரிதும் உதவுபவர்கள் எனவும், மீனவர்கள் வாழக்கூடிய கிராமங்கள் அழிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தான் பதில் சொல்ல வேண்டும். இந்த கிராமங்களில் வாழும் மக்களின் நிலை என்ன? எனவும், இந்த நிலையில் இன்று (ஆக.18) கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறக் கூடாது என்றார்.
மேலும், வரைபடங்கள் திருத்தப்படும் வரை கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படக் கூடாது எனவும், தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, மீனவர்கள் அடங்கிய குழுவை அமைத்து வரைபடங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும். மாநில அரசு இதனை அங்கீகரிக்ககூடாது எனவும், அப்படி அங்கீகரித்தால் வன்மையாக எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றார். தமிழ்நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த மீனவர்களும், மீனவ கிராமங்களும் பாதிப்படைந்து உள்ளது. மீனவர்களுக்கு ஆதரவாக அனைத்து சமூக மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்” என்றார்.
செய்தியாளர்களை சந்தித்து தென் இந்திய மீனவர் சங்க தலைவர் பாரதி கூறுகையில், “2019 வழிகாட்டுதல் படி கருத்துக்கேட்பு கூட்டம் 12 கடற்கரை மாவட்டங்களில் நடக்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் பங்காற்றுவது கடல் எனவும், ஓரங்களில் மீன் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள், மீன்பிடித் தொழில் செய்யும் இடங்கள் வரைபடத்தில் இடம் பெற வேண்டும். பொது பயன்பாட்டு இடங்களான படகு நிறுத்தும் இடம், மீன் விற்கும் இடம் உள்ளிட்டவையும் இடம் பெற வேண்டும், அவையும் இடம் பெறவில்லை.
மேலும், கடல் அரிப்பு தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பாதிப்பு உள்ளது. வரைபடத்தில் உயர், நடுத்தர, குறைந்த கடல் அரிப்பு குறிப்பிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். அதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும், முழுமையான சரியான வரைபடம் வெளியிட்ட பின் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்” எனவும் கூறினார்.
இதையும் படிங்க:‘கச்சத்தீவை தாரைவார்த்த திமுக’ என சொல்வது அடிப்படை அறிவு இல்லாததன் வெளிப்பாடு - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!