சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலை பர்கிட் சாலை சந்திப்பில் (HDFC) ஹெச்டிஎப்சி வங்கியின் கிளை இயங்கி வருகிறது. இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் 100 பேரின் வங்கிக் கணக்குகளில் நேற்று காலை வங்கியில் இருந்து தலா 13 கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் பலர் சம்பந்தப்பட்ட வங்கி அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் உடனடியாக 13 கோடி ரூபாய் பணம் சென்ற வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கை முடக்கி 13 கோடி ரூபாயை வங்கி கணக்கிலிருந்து மீண்டும் பதிவிறக்கம் செய்து இன்று (மே 30) முழுவதுமாக சீர் செய்தனர். சாஃப்ட்வேர் அப்டேட் செய்யும்போது, தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டு, வாடிக்கையாளர்களின் 90 பேரின் வங்கிக் கணக்கிற்கு 13 கோடி ரூபாயும், 10 வாடிக்கையாளருக்கு 5, 10 ஆயிரம் ரூபாயும் சென்றது தெரியவந்தது.
ஆனால், வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கிற்கு வெறும் குறுந்தகவல் மட்டுமே சென்றதாகவும், பணம் செல்வதற்குள் முடக்கி சீர் செய்துவிட்டதாகவும் வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனது வங்கிக் கணக்கில் 13 கோடி ரூபாய் வந்தவுடன் அதிர்ச்சியடைந்து தானே முதல் ஆளாக வங்கி அலுவலருக்குத் தகவல் கொடுத்ததாக கோடம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது அலி தெரிவித்துள்ளார்.