சென்னை: பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர், பாலமுருகன், இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன் தினம் (ஜன.2) இரவு திருவேற்காடு பகுதியில் ஆட்டோவில் பருத்திபட்டு அருகே சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் ஆட்டோ மீது மோதியுள்ளனர்.
இதில் ஆட்டோ சேதமடைந்த நிலையில் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்ததாகக் கூறி, அவரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். பணம் கொடுக்க மறுத்ததால் அவரை ஆட்டோவில் வைத்து கடத்திச்சென்று சிறிது தூரம் சென்றவுடன், பாலமுருகனை கீழே தள்ளி விட்டுவிட்டு ஆட்டோவைக் கடத்தி சென்றுள்ளனர்.
இதுகுறித்து பாலமுருகன் தனது சங்க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் முதலில் ஆட்டோ எங்கு உள்ளது என்பதை கண்டறிந்துவிட்டு, பின்னர் புகார் கொடுக்கலாம் என திருவேற்காடு சென்றனர். அப்போது காவல்நிலையத்தில் கடத்தப்பட்ட ஆட்டோவை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மர்ம நபர்களிடம் கேட்கச்சென்றபோது கையில் இருந்த இரும்பு ராடால் தாக்கியும், அரிவாளால் வெட்டியும் உள்ளனர். இதில் பிரகாஷ் என்பவருக்கு வெட்டு காயமும், சிலருக்கு காயமும் ஏற்பட்டது. இதுகுறித்து திருவேற்காடு போலீசில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்த நிலையில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ சங்க நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று திருவேற்காடு பஸ் நிலையம் அருகே சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் புகாரின் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கலைந்து செல்வதாகத் தெரிவித்து ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை மறியலைக் கைவிட மறுத்தனர். இதையடுத்து திருவேற்காடு போலீசார் அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த நிலையில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் மும்பைக்கு மாற்றப்படவுள்ளார்