இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை தீவுத்திடல் அருகே சத்தியவாணி முத்துநகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் மூன்றாயிரத்து 500 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூர்வகுடி தமிழர்களை தமிழக அரசு வெளியேற்ற அரசு முயற்சித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. எவ்வித முன்னறிவிப்புமின்றிக் காலங்காலமாக வாழ்ந்து வரும் மக்களின் வாழ்விடங்களை இடித்துத் தரைமட்டமாக்கியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டின் தலைநகராக விளங்கும் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இடநெருக்கடியை சமாளிக்க ஒவ்வொரு முறையும் குடிசைப்பகுதியில், நீண்டகாலமாக வசிக்கின்ற ஏழை, எளிய தொல்குடி தமிழர்களை அவர்களின் வாழ்விடத்திலிருந்து தொடர்ச்சியாக வெளியேற்றுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
சென்னையில் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எவ்வித தடையுமின்றி, பாதுகாப்பாக அனைத்து வசதிகளும் நிறைந்த நகரின் முக்கியப் பகுதிகளில் குடியேறி வாழ முடிகிறது. ஆட்சி, அதிகாரத்தைச் சேர்ந்தவர்களும், மேல்தட்டு வர்க்கத்தினரும் சென்னையின் நூற்றுக்கணக்கான நீர்நிலைகளையும், புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வசிப்பிடங்களில் எவ்வித அதிகார அச்சுறுத்தல்களுக்கு ஆளாகாமலும் நிலைத்து வாழ முடிகிறது.