சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சியிலும் தங்களது நல்லாட்சி தொடர வேண்டும் என்ற அடிப்படையில் இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
உள்ளாட்சித் தேர்தலில் தங்களின் பிரதான எதிரியான திமுகவை மண்ணோடு மண்ணாக ஆக்கும் வகையில் செயல்பட்டு வெற்றிபெற உழைக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கும், முக்கிய நிர்வாகிகளுக்கும் இக்கூட்டத்தின் மூலம் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், மக்களோடு இருந்து மக்களுக்காக உழைத்ததன் காரணமாகவே தெற்கில் நாங்குநேரியிலும், வடக்கில் விக்கிரவாண்டியிலும் மகத்தான வெற்றியை அதிமுக பெற்றது. ஆனால் எங்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்போல் திமுகவிற்கு மக்கள் கொடுக்கவில்லை. இதேபோல் வரவுள்ள உள்ளாட்சி தேர்தலிலும், 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறுவது நிதர்சனமான உண்மை.