சென்னை: அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தால் பிரிந்திருக்கும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, "அதிமுக நான்கு அணிகளாக பிளவுபட்டு இருக்கிறது. இந்த நிலையில் நாம் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னோட்டமாகவும், 2026ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்கும் நோக்கில் செயல்பட வேண்டும்" என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்து அதிமுக-பாமக கூட்டணி இடையே பிளவு ஏற்பட்டுள்ளது என பேசப்பட்டது. பாமக இவ்வாறு கூறுவது புதிதல்ல.
மாற்றம், முன்னேற்றம், அன்புமணி
2016ஆம் ஆண்டு மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற வியூகத்தை பாமக மேற்கொண்டது. ஆனால் அது அந்த அளவிற்கு சிறப்பாக அவர்களுக்கு வெற்றி அமையவில்லை. கடந்த காலங்களில், "பார் உள்ள வரை, கடல் நீர் உள்ள வரை, பூமி உள்ள வரை என்று இனி திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க போவது இல்லை" என பாமகவின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறியிருந்தார். 2019ஆண்டு வரை அப்போது இருந்த அதிமுக ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக பாமக இணைந்தது. இணைந்த போது பல்வேறு விமர்சனங்களை பாமக சந்தித்தது.
மாற்றம், முன்னேற்றம், அன்புமணி இதன் காரணமாக பாமகவிற்கு வழங்கப்பட்ட 7 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. பாமகவிற்கு வழங்கப்பட்ட மாநிலங்களவை பதவியில் அன்புமணி எம்.பியாக உள்ளார். 2021ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக, கொடுக்கப்பட்ட 23 தொகுதிகளில் 5-ல் மட்டும் வெற்றி பெற்றது.
பாஜக, பாமகவுடன் கூட்டணி அமைத்தது தவறு
2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது. இதற்கு ஒரு காரணமாக "வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இடஒதுக்கீடு" என அப்போது பேசப்பட்டது. அப்போது இருந்து அதிமுக-பாமக இடையே கருத்து மோதல்கள் ஏற்பட தொடங்கின. குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், "பாஜக, பாமகவுடன் கூட்டணி அமைத்தது தவறு" என பொதுவெளியில் கூறினார்.
பாமக தலைமையில் தான் கூட்டணி
இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற பொதுக்குழு மூலம் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் பதவி ஏற்றுக்கொண்டார். இதனை அடுத்து "பாமக 2.0" என்று பல்வேறு வகையான முன்னெடுப்புகளை அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டார். அப்போது இருந்து மீண்டும் "பாமக தலைமையில் தான் கூட்டணி" என அன்புமணி தற்போது வரை கூறி கொண்டே வருகிறார். பாமக இது போன்ற வியூகங்களை முயற்சி செய்வது முதல் முறை அல்ல. இது போன்று பலமுறை பேசியுள்ளது. வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் பாமக, திமுகவை நோக்கி நகர்கிறது
இது குறித்து சமீபத்தில் பேசிய ராமதாஸ், "சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் 10.5% இடஒதுக்கீடு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதை திமுக தலைவர் தம்பி மு.க.ஸ்டாலின் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது" என கூறியிருந்தார். அப்போது, 2024-ல் நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பாமக, திமுகவை நோக்கி நகர்கிறது என பேசப்பட்டது. சமீபத்தில் அன்புமணி கருத்து குறித்து பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுக நான்கு அணியாக பிரிந்துள்ளது என அன்புமணி கூறியிருப்பது வேதனை அளிக்கிறது. 1998ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு வழங்கப்பட்ட 5 நாடாளுமன்ற தொகுதிகளில் 4 தொகுதிகள் வெற்றி பெற்றது.
அன்புமணியை எம்.பியாக ஆக்கியதே நாங்கள் தான்
அப்போது தான் நாடாளுமன்றத்தில் பாமக அங்கீகரிக்கப்பட்டது. இல்லையென்றால் பாமக என்ற கட்சியே இருந்திருக்காது. 2001ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் வழங்கப்பட்ட 27 தொகுதியில் 20 வெற்றி பெற்றது. இதற்கு காரணம் அதிமுக. அதை பாமகவினர் மறந்துள்ளனர். அன்புமணியை எம்.பியாக ஆக்கியதே நாங்கள் தான்" என காட்டமாக கூறினார். ஏற்கனவே ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுக கூட்டணியில் இருப்பது குறித்து பாமக அதிருப்தியில் இருந்து வருகின்றனர். ஜெயக்குமாரின் இந்த கருத்து அதிமுக - பாமக கூட்டணியில் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்த உள்ளது என கூறப்பட்டது.
அன்புமணியை எம்.பியாக ஆக்கியதே நாங்கள் தான் நாங்கள் ஒன்றும் அதிமுகவின் தயவால் வளரவில்லை
ஜெயக்குமாரின் விமர்சனத்திற்கு பதில் அளித்த பாமகவின் செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு, "1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த போதே பாமக 4 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. நாங்கள் ஒன்றும் அதிமுகவின் தயவால் வளரவில்லை. 2019ஆம் ஆண்டு 13 இடங்களை அதிமுக வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைக்க பாமக உறுதுணையாக நின்றதை மறந்துவிட வேண்டாம்.
நாங்கள் ஒன்றும் அதிமுகவின் தயவால் வளரவில்லை இந்த கருத்தையெல்லாம் கூறுவதற்கு ஜெயக்குமார் யார்?. நுனி மரத்தில் அமர்ந்து கொண்டு அடிமரத்தை ஜெயக்குமார் வெட்ட நினைக்கிறார்" என கூறியிருந்தார். இப்படி இரண்டு தரப்பினரிடையே கருத்து மோதல்கள் உச்சகட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் அதிமுக-பாமக இடையேவுள்ள கூட்டணி தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
2026ஆம் ஆண்டு பாமக தலைமையில் கூட்டணி அமைப்போம்
இதுகுறித்து பேசிய அன்புமணி, "தேர்தலுக்கு 6 மாதத்திற்கு முன்பு தான் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு பாமகவின் செய்தி தொடர்பாளர் பாலு விளக்கமாக பதில் அளித்திருந்தார். எடப்பாடி பழனிச்சாமி இந்த சம்பவத்திற்கு கருத்து தெரிவித்த பிறகு என்னுடைய முழுமையான கருத்தை தெரிவிக்கிறேன். 2026ஆம் ஆண்டு பாமக தலைமையில் கூட்டணி அமைப்போம்" என கூறினார்.
பாமக தலைமையில் தான் கூட்டணி அதிமுக கூட்டணியால் நமக்கு பயன் இல்லை என்று பாமக நினைக்கிறது
இது குறித்து பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைச்சாமி, "அதிமுக கூட்டணியால் நமக்கு பயன் இல்லை என்று பாமக நினைக்கிறது. 2021 சட்டப்பேரவை தேர்தல் முடிந்தவுடன் அதிமுக பாமக இடையே விரிசல் தொடங்கியது. பிளவுபட்ட அதிமுகவால் எந்த அரசியல் லாபம் இல்லை என அன்புமணி, தனித்து செல்லலாம் என முடிவு எடுத்துள்ளார். அந்த முடிவு தான் இது போன்ற கருத்து மோதல்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. சி.வி.சண்முகம் போன்றோர் வளர்ச்சியை பாமக ஏற்றுக்கொள்ளவில்லை. சி.வி.சண்முகம், ஜெயக்குமார் கருத்துகளை எடப்பாடி பழனிச்சாமி கருத்தாகவே எடுத்துக்கொள்ளலாம்" என கூறினார்.
சி.வி.சண்முகம், ஜெயக்குமார் கருத்துகளை எடப்பாடி பழனிச்சாமி கருத்தாகவே எடுத்துக்கொள்ளலாம் அதிமுக பிளவுபட்டு உள்ளதால் நாம் தனித்து போட்டியிட தயாராக வேண்டும் - அண்ணாமலை
அன்புமணி கூறிய கருத்து போன்று சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "அதிமுக பிளவுபட்டு உள்ளது. அதனால் நாம் தனித்து போட்டியிட தயாராக வேண்டும்" என ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு அதிமுக சார்பில் பதிலளித்த ஜெயக்குமார், "அண்ணாமலையின் கருத்து பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கு அப்படி கூறியுள்ளார்" என கூறியிருந்தார். ஆனால் பாமக கூறிய கருத்திற்கு மிகப்பெரிய மோதல் போக்கை கடைபிடித்து இருப்பது, அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதை அதிமுக விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விரைவில் வெளியேறும் என சொல்லப்படுகிறது.
திமுக கூட்டணியில் இணைய திரைமறைவில் பாமக பேச்சுவார்த்தை
இது குறித்து பேசிய பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர், "கூட்டணி கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல்கள் வருவது இயல்பு. ஆனால் இரண்டு தரப்பு பேசுவதை பார்த்தால் இனி இந்த கூட்டணி தொடர்வதற்கு வாய்ப்பு இல்லாதது போல் தெரிகிறது. அதிமுக 4 அணியாக உள்ளது என அன்புமணி பேசியதை யாரும் ரசிக்க மாட்டார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உள்ள அதிமுக விரும்பாது. அதிமுகவை விமர்சனம் செய்வது மூலம் நாங்கள் அதிமுக கூட்டணியில் இருந்து விலகப் போவதாக திமுகவிற்கு தெரியப்படுத்துகின்றனர். திமுக கூட்டணியில் இணைவதற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மூலம் பாமக, திரை மறைவில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளனர்.
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டு வழங்கியதால் தான் அதிமுக தோல்வி அடைந்தது என மூத்த தலைவர்கள் நினைக்கின்றனர். இதனால் பாமக கூட்டணியில் இருந்து விலகினால் அதை எடப்பாடி தரப்பு பெரிதாக எடுத்துக் கொள்ளாது. அதை சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி போன்ற தலைவர்களை வைத்து சரி செய்ய நினைப்பார்கள்" என கூறினார்.
இதையும் படிங்க: 'காயத்ரி ரகுராம் திமுகவிற்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம்' - அமைச்சர் பொன்முடி