இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது," தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி இயக்குநர் என்ற பதவி ரத்து செய்யப்படுவதாகவும், இனி அந்தப் பணிக்கான பொறுப்புக்களைப் பள்ளிக்கல்வி ஆணையரே ஏற்று செயல்படலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வருத்தம் அளிக்கக் கூடிய ஒன்றாகும்.
பள்ளிக்கல்வி இயக்குநர் பதவி என்பது அனுபவத்தின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு பொறுப்பு. ஒரு அதிகாரம் மாத்திரமே சிறந்ததொரு பணியை நிர்வகிக்க முடியாது. அதற்கு கூடுதல் தகுதி அனுபவமும் அவசியமான ஒன்றாகும்.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவி ரத்து சீர்திருத்தத்திற்கு வழி வகுக்காது - வைகை செல்வன் - ex minister vaikai selvan
சென்னை: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்களின் ஒட்டு மாெத்தப் பொறுப்புகளையும் ஆணையர் ஏற்றுக் கொள்வது அதிகாரக் குவியலுக்கு வழிவகுக்குமே தவிர, பள்ளிக்கல்வியின் சீர்திருத்தத்திற்கு ஒரு போதும் வழிவகுக்காது என முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வைகை செல்வன் கூறியுள்ளார்.
ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி, மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு நடுநிலைப்பள்ளி, ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப்பள்ளி, எட்டு கிலோ மீட்டருக்கு ஒரு மேல்நிலைப்பள்ளி என்கிற தமிழ்நாட்டினுடைய அசைக்க முடியாத வெற்றிக் கோட்டைத் தொட்டுச் செல்வவதற்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், இணை இயக்குநர்கள் என்று இயக்குநர்களின் பணி அளப்பரியது.
அப்படிப்பட்ட கல்வி வளர்ச்சியில் அயராது பணியாற்றிய இயக்குநர் பதவியை ரத்து செய்வது என்பது அடாது செயல். அ.தி.மு.க அரசு இருந்த போதே, பள்ளிக்கல்வி ஆணையாளர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்ட போது முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் இது தவறான முன்னுதாரணம் என்று அப்போதே சுட்டிக் காட்டினேன். அது அதிகாரக் குறைப்பல்ல, வேலைகளைத் துரிதப்படுத்துகிற முயற்சியே என்று சொல்லப்பட்டது.
ஆனால் தற்போது இந்தப் பணியை அடியோடு ரத்து செய்வதும் ஒட்டுமொத்த இயக்குநர்களின் பொறுப்பை ஆணையாளரே ஏற்றுக் கொள்வதும் அதிகாரக் குவியலை ஏற்படுத்துமே தவிர பள்ளிக்கல்வியின் சீர்திருத்தத்துக்கு ஒருபோதும் வழி வகுக்காது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கு - தேவைப்பட்டால் துணை ராணுவப் படையை அழைக்கலாம் - ராமதாஸ்