சென்னை:குரோம்பேட்டை அரசு போக்குவரத்து பயிற்சி மையத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கான 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொர்பாக 7வது கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்று தொடங்கி நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க பிரதிநிதிகளை தனித்தனியாக வரவழைத்து, தனி அறையில் அமைச்சர் சந்தித்தார். இறுதியாக கலந்துரையாடல் அரங்கத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை காலத்தை நான்கு ஆண்டுகளாக அதிகரிக்கும் அரசின் முடிவிற்கு தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததாலும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படாததால் பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டது.
இதனால் சில முக்கிய கோரிக்கைகள் நிறைவேறாமல் இருந்ததால் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று தற்போது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இரண்டாவது நாளாக 14வது ஊதிய ஒப்பந்த ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.