சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் என்ற தலைப்பில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். இதுதொடர்பாக உரையாற்றிய அவர், "பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தாலும், மக்கள் தொகைப் பெருக்கத்தாலும் கடலோர மக்களின் வாழ்வாதாரம் வருங்காலங்களில் கடுமையாகப் பாதிக்கப்படக் கூடும். கடல் அரிப்பைத் தடுக்கவும், கடல் மாசுபாட்டை குறைக்கவும், கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும் 'தமிழ்நாடு நெய்தல் நீட்சி இயக்கம்' என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உலக வங்கி நிதியுதவில் ரூ.2000 கோடி மதிப்பீட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
ஈரோட்டில் வனவிலங்கு சரணாலயம்: அழிந்து வரும் வன உயிரினங்களைக் காக்க ஒரு தொடர்ச்சியான பாதுகாக்கப்பட்ட வனப்பரப்பு அவசியம். எனவே, நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தை தென்காவிரி வனவிலங்கு சரணாலயத்துடன் இணைக்கும் வகையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோபிச்செட்டிபாளையம் வட்டங்களில் உள்ள 80,567 ஹெக்டேர் வனப்பரப்பில், தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் என்ற புதிய சரணாலயத்தை அரசு ஏற்படுத்தும். இது மாநிலத்தின் 18-வது வனவிலங்கு சரணாலயம் ஆகும்.