இது தொடர்பாக தன்னாட்சி அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிகாரங்களைப் பரவலாக்கி, உள்ளூர் மக்களின் தேவைகளை உள்ளூர் அளவிலேயே திட்டமிட்டு, முறைப்படுத்தித் தீர்வுகள் காணக் கொண்டுவரப்பட்டவையே உள்ளாட்சி அரசாங்கங்கள். குறிப்பாக, கிராம ஊராட்சிகள் மக்களுக்கு மிக அருகிலிருந்து அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ளன.
எனவேதான், இந்திய அரசியலமைப்புச் சட்டம், அதன் 11ஆவது அட்டவணையில் ஒவ்வொரு கிராம ஊராட்சியும் குறிப்பிட்ட 29 பொருள்களில் பணியாற்றிட அதிகாரம் வழங்கியுள்ளது. மேற்குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்கும், மக்களின் பிற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், மத்திய, மாநில நிதிக்குழு நிதிகள், கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்திருக்கின்றது.
ஆனால், தற்போது 15ஆவது மத்திய நிதிக்குழு நிதி, 5ஆவது மாநில நிதிக்குழு நிதி ஆகியவற்றை கிராம ஊராட்சிகளுக்கு வழங்காமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருகிறது. சொந்த வருவாய் மிகக் குறைவாகவே உள்ள நிலையில், கிராம ஊராட்சிகள் இந்த இக்கட்டான ஊரடங்கு, பெருந்தொற்று காலங்களில் மக்கள் பணியாற்றிட, மத்திய மாநில நிதிக்குழு நிதிகள் மிகவும் இன்றியமையாதவை. மேலும் பெரும்பாலான கிராம ஊராட்சிகள் இந்நிதிகளைக் கொண்டுதான் தங்களுக்கான வளர்ச்சிப் பணிகளையும் ஊழியர்களுக்கான ஊதியங்களையும் வழங்கி நிர்வாகத்தை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், 15வது நிதிக்குழு நிதியின் முதல் தவணையான ரூ 901.75 கோடி கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதியன்று மத்திய நிதியமைச்சகத்திலிருந்து தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. [அரசாணை நிலை எண் 116 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை நாள்: 25.06.2020]. மத்திய நிதிக்குழு நிதியினை தனக்குக் கிடைத்த 10 நாட்களுக்குள் மாநில அரசு கிராம ஊராட்சிகளுக்கு விடுவித்துவிட வேண்டும் என்றும் அவ்வாறு விடுவிக்காவிட்டால் உரிய வட்டித்தொகையினை வழங்க வேண்டும் எனவும் விதி உள்ளது குறிப்பிடத்தக்கது [15 வது நிதிக்குழு பரிந்துரைகள் – 15th Finance Commission Recommendations Chapter 5, XX].
ஆனால், பல ஊராட்சிகளுக்கு இந்த நிதியானது இன்னும் வந்து சேரவில்லை என்பது மிகவும் அதிர்ச்சியான தகவலாக உள்ளது. தன்னாட்சி நேரடியாகப் பல ஊராட்சி பிரதிநிதிகளுடன் பேசியது மூலமாகவும் அவர்களிடம் இணையவழியில் கருத்துக்களைப் பெற்றதன் மூலமாகவும், தமிழ்நாட்டில் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இந்த நிதியானது இக்கட்டான இச்சூழலிலும் நிராகரிக்கப்பட்டு வருவது தெரியவருகிறது.