சென்னை:சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும் முன் இன்று(ஏப்ரல் 27) செய்தியாளர்களை் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் உள்ள அப்பர் கோயிலில் இன்று அதிகாலை நடந்த சித்திரை தேரோட்ட விழாவில் தேர் உயர் அழுத்த மின் கம்பி மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதிகாலை 3 மணிக்கு விபத்து நடந்து உள்ளது. 5 மணிக்கு முதலமைச்சர் என்னை தொடர்பு கொண்டு உடனடியாக நேரில் சென்று பார்வையிட உத்தரவிட்டார். 11 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். முதலமைச்சரும் நேரில் வந்து பார்வையிட உள்ளார். மாவட்ட ஆட்சியர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. முதலமைச்சரிடம் விசாரணை அறிக்கை தரப்படும். அதன் பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு நடவடிக்கை:தேர் விபத்தில் குழந்தைகள், இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். தேர் திருவிழா என எவ்வித விழாவாக இருந்தாலும் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். அதிகாலை 3 மணிக்கு விழா முடியும் நேரத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. நடக்க கூடாத துயர சம்பவம் நடந்து உள்ளது. இனி இது போல் சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பள்ளிகளில் மாணவர்கள் செயல்பாடு குறித்து முதலமைச்சருடனான ஆலோசனை முடிந்து உள்ளது. ஓரிரு நாளில் இது தொடர்பாக அறிக்கை வெளியிடப்படும். சமூக அமைப்புகள் இணைந்து தான் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. பள்ளியில் நடைபெற்ற அண்மைகால நிகழ்வுகள் வருத்தம் அளிக்கிறது. இதை சரி செய்யும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேர் விபத்து: தஞ்சாவூர் விரைகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்