சென்னைதலைமை செயலகத்தில் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை, மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஆளுநர், அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கம் செய்திருப்பதாக அறிவித்தார். முதலமைச்சர் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றார். நேற்று நள்ளிரவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆளுநரை அழைத்து கண்டித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம் செய்த கடிதத்தை நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
சட்டப்படி அமைச்சரை நியமிக்கவும், நீக்கம் செய்யவும் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. இது விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு விரிவான கடிதத்தை முதலமைச்சர் இன்று எழுதவுள்ளார். அதில், அமைச்சரை நியமித்ததோ நீக்குவதோ தனிப்பட்ட அதகாரம் ஆளுநருக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். அரசியல் அமைப்பு சட்டப்படி ஆளுநர் நடவடிக்கை எடுக்கும் முன்னதாக எந்த ஆலோசனையும் பெறாமல் அவசரகதியாக எடுத்து முடிவை அரசு நிராகரிக்கிறது.
முழுக்க முழுக்க முதலமைச்சரின் அதிகாரம், முதலமைச்சர் ஆலோசனை பெறாமல் ஒரு அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பதை தெளிவுப்படுத்தியுள்ளோம். ஆளுநர் தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்குகிறார். நாங்கள் சட்டரீதியாக போராடி வெற்றி பெற்று வருகிறோம். ஆளுநரின் இத்தகைய செயல்பாடுகளை நாங்கள் கண்டிக்கிறோம். முதலமைச்சரின் அதிகார வரம்புக்கு உட்பட்ட அமைச்சரின் நியமன நீக்க விவகாரதில் ஆளுநர் அதிகார வரம்பு மீறி செயல்படுகிறார்” என குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இல்லாத பூனையை இருட்டு வீட்டுக்குள் தேடுவது போல ஆளுநர் செயல்படுகிறார். சர்க்காரியா கமிஷன் காலத்திலிருந்தும், 2 ஜி விவகாரத்திலும் திமுக மீது எந்த ஆதாரத்தையும் அளிக்க இயலவில்லை. செந்தில் பாலாஜி விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்த எந்த இடையூறும் செய்யவில்லை. செந்தில் பாலாஜி மீது மற்றும் குற்றம் சாட்ட காரணம் என்ன? குற்றம் சாட்டப்பட்டவரை தகுதி நீக்கம் செய்யமுடியாது என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவே கூறியிருக்கிறார்.
ஒன்றிய அமைச்சர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களை நீக்கி விட்டார்களா? செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல். மத்திய அமைச்சர்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவர்கள் அமைச்சர்களாக தொடர்கின்றனர். ஆளுநர் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக செந்தில் பாலாஜி மீதான இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகிறார். மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பை எய்தலாம் எனும் நோக்கில் எதிர் கட்சியினர் மட்டுமல்லாமல் ஆளுநரும் திமுகவினர் மீதான தாக்குதலில் ஈட்டுப்பட்டு வருகிறார்.