கரோனா வைரஸின் ருத்ரதாண்டவத்தை சமாளிக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல முயற்சிகளை செய்துவருகிறது.
அந்த வகையில், ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்ஸிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர் காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு நிதி தேவைப்படுகிறது.
எனவே, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
இதனையடுத்து அரசியல் தலைவர்கள் முதல் நடிகர்கள் வரை தங்களால் முடிந்த நிதியை முதலமைச்சரிடம் வழங்கி வருகின்றனர். அப்படி நிதி வழங்கியவர்களில் அனைவரையும் நெகிழச் செய்திருக்கிறார், சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த காவலாளி. தனியார் நிறுவனத்தில் இரவு நேர காவலாளியாகப் பணியாற்றுபவர், தங்கதுரை.
முதலமைச்சரை நெகிழச் செய்த தங்கதுரை கரோனாவுக்காக நிதி வழங்க முடிவு செய்த அவர், மற்றவர்கள்போல் ஒரு பங்கையோ, இரண்டு பங்கையோ நிதியாக கொடுக்கவில்லை. தன்னுடைய ஒரு மாத ஊதியமான பத்தாயிரத்து 101 ரூபாயை அப்படியே மொத்தமாக நிதியாக அளித்துள்ளார்.
அசாதாரணச் செயலை செய்யக்கூடிய சாமானியர்களுக்கு எப்போதும் சாதாரண செயல்கள் கடினமானதாகவே இருக்கும். ஆம், தன்னுடைய ஒட்டுமொத்த வருமானத்தையும் நிதியாக கொடுத்த தங்கதுரைக்கு, அதனை முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்க வேண்டுமென்பது ஆசை. ஆனால், அது நடக்கவில்லை. எனவே, தனது நிதியை வங்கிக் கணக்கில் செலுத்தினார்.
இதனை கேள்விப்பட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக தங்கதுரையை அழைத்து நேரில் சந்தித்து, திருக்குறளுக்கு கருணாநிதி எழுதிய உரை நூலைப் பரிசாக கொடுத்தார்.
உதவி செய்வது என்றால், என்னவென்று கேட்கும் தற்போதைய சமூகத்தில் விளிம்புநிலையில் இருக்கும் தங்கதுரையோ... தனது ஒரு மாத ஊதியத்தை அப்படியே உதவியாக அளித்திருப்பது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், அவர் நிறுவனத்திற்கு மட்டும் காவலாளி இல்லை மனித குலத்திற்கும் காவலாளி என்பதை உணர்த்தியுள்ளார் எனப் பலர் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.