சென்னை:தாமிரபரணி ஆற்றிலிருந்து ஆண்டுதோறும் சராசரியாக 13 டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதால், ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி, சாத்தான்குளம் பகுதிகளுக்குக் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வருவதற்காகத் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறுகளை இணைக்க 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.
2011ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், அதை விரைவுபடுத்தத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி, தற்போதைய சபாநாயகரான மு.அப்பாவு (அப்போது திமுக எம்எல்ஏ) பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த வழக்கில் அரசு தாக்கல் செய்த அட்டவணையின்படி, பணிகளை முடிக்கும்படி 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை எனத் தமிழ்நாடு அரசுக்கு எதிராக 2017ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அப்பாவு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (மார்ச் 1) விசாரணைக்கு வந்தது.