தமிழ்நாடு சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
‘சபாநாயகரின் பதில் வேதனை அளிக்கிறது’ - தமிமுன் அன்சாரி - குடியுரிமை திருத்தச் சட்டம்
சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கேட்டால் சபாநாயகர் நகைச்சுவையாகப் பதிலளிப்பது தமக்கு வேதனை அளிப்பதாக சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி, ‘குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும் என்றும், கேரள அரசு போல் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் மனு கொடுத்தோம். ஆனால் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்றும் ஆய்வில் உள்ளது என்று சபாநாயகர் சிரித்துக்கொண்டே சொல்கிறார்.
இந்திய மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், சபாநாயகர் இவ்வாறு நகைச்சுவையாகக் கூறுவது வருத்தமளிக்கிறது. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளேன்’ என்றார்.