சென்னை: தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் மண்டலத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அதன்பின், அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "புயல் காரணமாக, பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் 290 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12 மண்டல அலுவலர்கள் 33 மண்டலக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 325 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 191 ஜேசிபி இயந்திரங்கள், 134 ஜெனரேட்டர்கள், 2194 மின்சாரத்துறை அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
25 நபர்களைக் கொண்ட தேசிய மேலாண்மை பேரிடர் மீட்பு குழுவினர் தாம்பரம் பகுதியிலும் கோவலம் பகுதியிலும் தங்கி உள்ளனர். மழைநீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு உடனடியாக அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை நேரங்களில் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை முதல் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டால், மின்மோட்டார்கள் இயக்குவதற்கு ஜெனரேட்டர்களும் தயார் நிலையில் உள்ளது. ஏற்கனவே, மேற்கொள்ளப்பட்ட மழை நீர் வடிகால் பணிகளால் முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகள் பாதிக்கப்படாமல் இருக்கிறது.
500 மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது. 2900 மின் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எந்த இடர் ஏற்பட்டாலும் சரி செய்வதற்காக 24 மணி நேரமும் பணியாளர்கள் பணியில் இருக்கிறார்கள் என்றார். முன்னதாக, கடந்த நவம்பர் மாதம் இறுதியில் தெற்கு அந்தமான் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மெல்ல மெல்ல வலுப்பெற்று, நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது.
இந்நிலையில் இன்று (டிச.03) காலை 5.30 மணி அளவில் புயலாக வலுப்பெற்று, மேற்கு வங்கக்கடலில் 300 கிலோ மீட்டர் புதுச்சேரிக்குத் தென்கிழக்கிலும், சென்னைக்கு தென்கிழக்கே 310 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. அதைத்தொடர்ந்து இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று டிசம்பர் 4ஆம் தேதி காலைக்குள் தெற்கு ஆந்திரப் பகுதியை ஒட்டிய வட தமிழகக் கடலோரப் பகுதிக்குச் சென்று மேற்கு மத்திய வங்கக்கடலை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு, தெற்கு ஆந்திராவிலுள்ள கடற்கரைக்கு நகர்ந்து, நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் இடையே டிசம்பர் 5ஆம் தேதி முற்பகலில் ஒரு புயலாகக் கரையைக் கடக்கும் எனவும், அதிகப்பட்சமாக மணிக்கு 80 - 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வங்கக் கடல் பகுதியில் மிக்ஜாம் புயல் சின்னம் காரணமாக கனமழை முதல் மிகக்கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:"சனாதனத்தை எதிர்த்தால் இந்த கதி தான்" - முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்!