சென்னை:ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய வழக்கில் பணிப்பெண் ஈஸ்வரி, கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகிய இருவரை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். கைது செய்யப்பட்ட ஈஸ்வரிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டு சொத்து ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். மயிலாப்பூரைச் சேர்ந்த வினால்க் சங்கர் நவாலி என்பவர் திருடப்பட்ட நகைகளை வாங்கியதாக தேனாம்ப்பேட்டை போலீசார் கைது செய்து உள்ளனர். வினால்க் சங்கர் நவாலியிடம் இருந்து 340 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடயே கைது செய்யப்பட்ட வெங்கடேசனிடம் 9 லட்ச ரூபாய் பணத்தை ஈஸ்வரி கொடுத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதன் அடிப்படையில் வெங்கடேசனிடம் பணம் உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், ஈஸ்வரி தனது கணவர் அங்கமுத்து பெயரில் வங்கி கணக்கில் அடகு வைத்துள்ள 350 கிராம் தங்க நகைகளை மீட்கும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
அதேநேரம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் ஈஸ்வரி திருடியது மற்றும் சோழிங்கநல்லூர் பகுதியில் வீடு வாங்கியது என எதுவும் அங்கமுத்துக்கு தெரியாது எனக் கூறப்படுகிறது. சோழிங்நல்லூர் பகுதியில் வாங்கிய வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது பெயரில் பினாமியாக வாங்கியதாக ஈஸ்வரி தெரிவித்ததாக கூறப்படுகிறது.