சென்னை:உயர்கல்விக்கான பாடப்புத்தங்களை தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தயார் செய்துள்ளதை பல்கலைக்கழங்களில் அமல்படுத்த வேண்டும் என ஜூன் 31ஆம் தேதி நடைபெற்ற துணைவேந்தர்கள் கருத்தரங்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். இந்த நிலையில், தேசியக் கல்விக்கொள்கையின் (National Policy on Education) அடிப்படையில் தயார் செய்யப்பட்ட பாடப்புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு துணைவேந்தர்களுடன் ஊட்டி ராஜ்பவனில் நாளை கருத்தரங்கு நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறை, கால்நடைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வேளாண்மைத் துறை, மீன்வளத் துறை ஆகியவற்றின் கீழ் 19 மாநில பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழ்நாட்டின் ஆளுநர் இருந்து வருகிறார். பல்கலைக்கழங்களின் வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் துணை வேந்தர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய கல்விக் கொள்கையை பல்கலைக்கழகங்களில் அமல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தேசியக்கல்விக் காெள்கையும் தமிழ்நாடும்:ஆனால், தமிழ்நாட்டில் தேசியக் கல்விக்காெள்கைக்கு கல்வியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும், தமிழ்நாட்டிற்கு என தனித்துவமான கல்விக் கொள்கை உருவாக்கும் பணிகள் டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஒய்வுப் பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வரும் 5 ஆம் தேதி ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆலோசனை நடத்துகிறார்.
துணைவேந்தர்களுக்கு ஆளுநர் மாளிகை அழைப்பு: புதிய கல்விக் கொள்கைத் தொடர்பான இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, ஆளுநர் அலுவலகத்தில் இருந்து துணை வேந்தர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. அதில், மாநில மற்றும் தனியார் பல்கலைகழகங்களின் துணை வேந்தர்கள் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பல்கலைகழகங்களுடன் ஜூன் 31ஆம் தேதி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் பாடத்திட்டம்: அப்போது தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தயார் செய்துள்ள பாடத்திட்டத்தினை அனைத்து பல்கலைகழங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் 75 சதவீதம் நடத்த வேண்டும் என்றும், அப்போதுதான் அந்தப் படிப்புகள் பிற பல்கலைகழகத்தால் நடத்தப்படும் படிப்பிற்கு இணையானது என சான்றிதழ் உயர்கல்வித்துறையால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், பல்கலைகழங்களின் வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி நடத்தும் துணைவேந்தர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்பது என்பது அவர்களின் விருப்பம் என்றும், யாரையும் கலந்தகொள்ள வேண்டாம் என கட்டுப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.