சென்னை:தென் தமிழகத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை சார்பாகப் பாடப் புத்தகங்கள் நோட்டு புத்தகங்கள் இரண்டு சீருடைகள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் அறிவித்துள்ளார்.
தென் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போனது. மழை வெள்ளம் காரணமாக வீடுகளிலிருந்த பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதே போல் பள்ளி மாணவ மாணவிகளின் பாடப் புத்தகம் நோட்டு புத்தகங்களும் மழை நீரில் மூழ்கி வீணாகி உள்ளது.
இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பிய பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர்களின் வசதிக்கு ஏற்ப அரையாண்டு தேர்வு நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
கனமழையால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் பள்ளிகளைத் திறப்பதற்கு முன்னர் கட்டிடங்கள் தன்மையும், மாணவர்கள் பாதுகாப்பையும் ஆய்வு செய்யப் பள்ளிக் கல்வித்துறையின் இணை இயக்குநர்கள் குழு அமைக்கப்பட்டு ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகள் திறக்கும் பொழுது மாணவர்கள் கற்கும் சூழ்நிலை அமையும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்ற வருகின்றன.
இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இம்மாவட்டங்களில் பார்வையிட்டு, ஆய்வு செய்து வழங்கிய அறிவுரையின்படி, இந்த மாவட்டங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி பாதிக்காதவகையில் இருக்கப் பாடப்புத்தகங்கள். நோட்டு, புத்தகங்கள், புத்தகப்பைகள் மற்றும் கூடுதலாக இரண்டு சீருடைகள் அருகாமையிலுள்ள மாவட்டங்களிலிருந்து பெற்று வழங்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் போது நோட்டு புத்தகம் பாடப் புத்தகங்கள் பள்ளியின் ஆசிரியர்களால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக்சாம் புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குப் பிற மாவட்டங்களிலிருந்து பாடப் புத்தகங்கள் பெறப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தூத்துக்குடியில் உள்ள 8 கல்லூரிகளில் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு.. அண்ணா பலகலைக்கழகம் அறிவிப்பு!