உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் சென்னை:ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு பணி நியமனத்திற்கு மீண்டும் போட்டித் தேர்வு என்ற அரசாணை 149 நீக்கம் செய்வோம் என திமுக கூறியது. இந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கொளுத்தும் வெயிலில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்று கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக பணிக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள், தங்களுக்குப் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், ஆசிரியர் பணிக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணை 149-ஐ நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
முக்கியமாக திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபடும் இவர்கள், தற்போது வள்ளுவர் கோட்டத்தில் அனுமதி பெற்று குழந்தைகளுடன் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற சங்கங்களின் கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் ரவி கூறுகையில், ''ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்களுக்கான பணி நியமன போட்டித் தேர்வு என்ற அரசாணை 149 நீக்கம் செய்ய வேண்டும். பணி நியமனத்தின்போது வயதைக் கருத்தில் கொண்டு பழையபடி ஆசிரியர் பணி பெறும் வயதை 57ஆக உயர்த்த வேண்டுகிறோம்.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை 177-ன் படி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டுகிறோம். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பத்தாண்டுகளாக பணிவாய்ப்பின்றி காத்திருக்கும் தகுதி தேர்வு தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டித் தேர்வு என்ற அரசாணை வெளியிட்ட பொழுது, அதனை தற்போது முதலமைச்சர் எதிர்த்ததுடன், எங்களின் போராட்ட களத்திற்கே வந்து ஆதரவு தெரிவித்தார்.
திமுக அரசு அமைந்த பின்னர் 11 முறை எங்களின் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை நடத்தியுள்ளோம். ஆனால், தேர்தல் வாக்குறுதி மறந்தவராக முதலமைச்சர் இருக்கிறார். அவருக்கு நினைவூட்டுவதற்காகவே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம்.
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது, அவர்களின் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து தீர்ப்பதற்கு குழு அமைத்தனர். அதேபோல் எங்கள் போராட்டத்திற்கும் குழு அமைத்து பணி நியமனம் வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தொற்று காலத்தில் குடிமைப்பணி தேர்வு எழுதிய அவர்கள், பாதிக்கப்பட்டார்கள் என்பதற்காக மத்திய அரசிற்கு முதலமைச்சர் விலக்கு கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பணி நியமனங்கள் நடைபெறாமல் இருக்கிறது. இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, எங்களுக்கும் விலக்கு அளித்து பணி வழங்குவதற்கான உத்தரவாதத்தை தரும் வரையில் தொடர்ந்து போராட்டத்தை மேற்கொள்வோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:திமுக பொதுக்கூட்டத்தில் தீக்குளிப்பேன் - மிரட்டல் கடிதம் எழுதிய யூனியன் சேர்மன்